'எதிர்க்கட்சிகளின் பொறியில் சிக்காதீர்கள், ஒழுக்கம் மீறினால் பதவி பறிபோகும்': தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது அடுத்தடுத்து சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ-க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், "எதிர்க்கட்சியினர் உங்களுக்கு விரிக்கும் பொறிகளிலோ வலைகளிலோ யாரும் சிக்கிவிடக் கூடாது. மக்கள் பணியில் ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்; தவறான பாதையில் யார் சென்றாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவசரக் கூட்டம்
மாமல்லபுரம் அவசரக் கூட்டம்: பின்னணி என்ன?
தவெக அரசு பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அண்மைக்காலமாக எழுந்த சில சம்பவங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்தன.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறி எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றன.
குடிநீர் வசதி கோரி மனு அளிக்க வந்த இளைஞரைக் தாக்கியதாக சட்டப்பேரவை துணைச் சபாநாயகரும் தவெக எம்.எல்.ஏ-வுமான ரவிசங்கர் மீது வீடியோ சர்ச்சை எழுந்தது.
இவற்றைத் தொடர்ந்து, உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து ஆராய இந்த அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒழுக்கம்
"ஒழுக்கம் இல்லையென்றால் பதவி பறிபோகும்"
கூட்டத்தில் கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தீவிரமாகவும் கோபமாகவும் பேசிய விஜய்,"நாம் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஆனால் நம்மைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் வலை விரிக்கும். ஆத்திரமூட்டும் பொறிகளுக்குள் யாரும் மாட்டிக்கொள்ளக் கூடாது."
"பொதுமக்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் அதிகாரத் தோரணையில் நடப்பதை ஏற்க முடியாது. தவறான வழியில் யார் சென்றாலும், அவர்கள் அமைச்சராக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது சட்டம் மற்றும் கட்சி ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுக்கத்தை மீறுபவர்களுக்குக் கட்சியில் இடமில்லை" எனத்தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
தனித்தனி சந்திப்பு
3 நாட்கள் விடுதி முன்பதிவு? MLA-க்களுடன் தனித்தனி சந்திப்பு
மாமல்லபுரம் தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் விஜய் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வையும் தனித்தனியாக சந்தித்து தொகுதியில் நடைபெற்ற பணிகள் மற்றும் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
முதல்வரை சந்தித்து பேசிய தவெக பெண் எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பிற்குப் பின் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
எதிர்க்கட்சிகளின் 'குதிரை பேர' அச்சுறுத்தலை தவிர்க்க இந்த விடுதி 3 நாட்களுக்குத் தவெக சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தொகுதிப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஊடகங்களிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்றும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.