மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், நேற்று மாலை 5-மணிக்கு, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. அவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதிலிருந்தும் அவரது பக்தர்கள் பலரும் மேல்மருவத்தூர் நோக்கி பயணித்து வருவதாலும், அதிக கூட்டம் கூடும் என எதிர்பார்ப்பதாலும், கிட்டத்தட்ட 2000 போலீசார் மேல்மருவத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று, மறைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன், மேல்மருவத்தூருக்கு வந்தார். அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை மேல்மருவத்தூருக்கு சென்று, அன்னாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்களும் சென்றனர்.
அன்னதானதிற்கு ஏற்பாடு செய்த அடிகளாரின் தொண்டர்கள்
பொதுமக்களின் அஞ்சலிக்காக, பங்காரு அடிகளாரின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவதை அடுத்து, ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் நேற்று இரவு முதல் உணவும், குடிநீரும் வழங்கபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பங்காரு அடிகர்ளின் உடல், பூரண அரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அடிகளாரின் மறைவிற்கு, பிரதமர் மோடியும் தனது அஞ்சலி செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பிரதமர் மோடி, தமிழகம் வந்தபோது, அவரை நேரில் தரிசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.