இன்னும் 3 ஆண்டுகளில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக இது குறித்து, கடந்த 27-ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில்,"சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு வழங்க வேண்டும்" என்று கோரினார். இந்த நிலையில் தான், நேற்று பிரதமர் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் வழித்தடங்கள் என்ன?
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது. முதற்கட்ட மெட்ரோ ரயில் தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் இயக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு இந்த மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2-ஆம் கட்ட திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. அதற்கு காரணம், இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலும், நிதியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில்தான், பிரதமரை முதல்வர் சந்தித்தார்.
மத்திய அரசின் அறிக்கை
இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி: மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம், 2027-ஆம் ஆண்டில் நிறைவடையும் எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.