Page Loader
பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 28, 2024
04:31 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடலில் 8 முதல் 12 அடி உயரத்திலான ஆழமான அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சென்னை மெரினா கடற்கரை முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடலில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர். பெங்கல் புயல் காரணமாக கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாகவும், காற்றின் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது. மெரினா கடற்கரை பிரபல சுற்றுலா தலமாக இருப்பதால் பொதுமக்கள் கடலை ரசிக்க செல்லுவது வழக்கம். ஆனால் தற்போது பெங்கல் புயலின் தாக்கம் காரணமாக, சூறைக்காற்றும் மணலுடன் வீசுவதால் தற்போது கடற்கரைக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ரோந்து பணியில் காவல்துறையினர்

சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் கீழ், மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக, அண்ணாசதுக்கம், மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் போலீசாரின் குழுக்கள், ரோந்து வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையைக் கடந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக 3 காவல் நிலையங்களில் இருந்து தலா 15 போலீசாரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், உயிர் காக்கும் குழு மற்றும் குதிரைப்படை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அலைகளை காண கடற்கரைக்கு கூடும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.