மஹுவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் வாங்கியது உண்மைதான்- தொழிலதிபர் அதிரடி
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் வாங்கியது உண்மைதான் என தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி தெரிவித்துள்ளார். எரிசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை அதானி குழுமத்திடம், ஹிராநந்தனி குழுமம் இழந்தது. இதனை அடுத்து, பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க ஹிராநந்தனி குழுமம், எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கியதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ள எம்பி மகுவா, மேலும் பாஜக எம்பி தூபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் மற்றும் சில செய்தி நிறுவனங்களுக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற லாகின் ஐடியை மகுவா கொடுத்தார்- தொழிலதிபர் தர்ஷன்
தொழிலதிபர் தர்ஷன், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், சீக்கிரம் தேசிய அளவில் பிரபலமடைய விரும்பிய எம்பி மஹுவா, பிரதமர் மோடியை தொடர்ந்து தாக்கி கேள்வி கேட்டால், அது நிறைவேறும் என நம்பினார். இதற்காக பிரதமர் மோடி மற்றும் அவர் மாநிலத்தைச் சேர்ந்த கெளதம் அதானியை தாக்கி கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அதானியை தாக்கி பேசுவதற்கான கேள்விகளை தயாரிக்க, நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்படும் 'நாடாளுமன்ற லாகின் ஐடி'யை தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக, தர்ஷன் அதில் கூறியுள்ளார். மேலும், மஹுவா தொடர்ந்து தன்னிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்கள், சுற்றுலா தொகுப்புகளை கேட்டு வந்ததாகவும் அந்த பிரமாணத்தில் அவர் கூறியுள்ளார்.
எம்பி மகுவா குற்றம் சாட்டும் தர்ஷன் ஹிராநந்தனி
பாஜக எம்பி தூபே நாடாளுமன்ற சபாநாயகர் பிர்லாவிடம் வழங்கிய புகாரில், ஹிராநந்தனி குழுமம், தனது தொழில் எதிரியான அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி கேட்க, எம்பி மஹுவாவிற்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். ஆனால் தர்ஷன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், எம்பி மஹுவா தான் முதலில் இந்த திட்டத்துடன் தன்னை அணுகியதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். மேலும் எம்பி மஹுவாவுக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சசிதரூர் உள்ளிட்டவருடன் நல்ல நட்பு இருந்ததால், அவர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் தனக்கு சாதகம் கிடைக்கும் என தர்ஷன் நம்பியதாக கூறியுள்ளார். மேலும், பெரும்பான்மையான சமயங்களில் தனக்கு விருப்பமில்லாத விஷயங்களை, எம்பி மஹுவா வற்புறுத்தி செய்யச் சொன்னார் என தர்ஷன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தன் மீதான அவதூருக்கு பிரதமர் அலுவலகம் மீது எம்பி மகுவா குற்றச்சாட்டு
எம்பி மஹுவா, தன் மீதான குற்றச்சாட்டிற்கு எக்ஸ்-இல் இரண்டு பக்க அறிக்கையையும், 5 கேள்விகளையும் கேட்டுள்ளார். தர்ஷன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் 'லெட்டர் பேடு' இல்லாமல் வெறுமனே வெள்ளை காகிதத்தில் இருந்ததை, எம்பி மஹுவா சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தர்ஷனுக்கு சிபிஐ உள்ளிட்ட எந்த அமைப்புகளும் சம்மன் அனுப்பாத நிலையில், இந்த பிரமாண பத்திரத்தை யாரிடம் தாக்கல் செய்தார் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தர்ஷனுக்கு எழுதிக் கொடுத்ததே, பிரதமர் அலுவலகம் தான் என, பிரதமர் அலுவலகம் மீது எம்பி மஹுவா குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்பி மகுவா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னவாகும்?
பாஜக எம்பி தூபே, எம்பி மஹுவா மீது, நாடாளுமன்ற உரிமை மீறல், சபை அவமதிப்பு, குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் வழங்கிய புகாரை, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவிற்கு சபாநாயகர் பரிந்துரை செய்துள்ளார். இது வரும் 26ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது. பாஜக எம்பி மற்றும் தர்ஷன் கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் உரிமை மீறலில் ஈடுபட்டதற்காக எம்பி மஹுவா இடைநீக்கம் செய்யப்படலாம்.
எம்பி மகுவா வெளியிட்டுள்ள அறிக்கை
Jai Ma Durga. pic.twitter.com/Z2JsqOARCR— Mahua Moitra (@MahuaMoitra) October 19, 2023