பாஜகவின் 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலத்தில் போட்டி
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது. இப்பட்டியலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால், முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மற்றும் நடிகர் அருண் கோவில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கங்கனா ரணாவத் தனது பூர்விகமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் களமிறங்கியுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால், ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் இருந்து வருண் காந்தியை விலக்கிவிட்டு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு அந்த தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது.
'ராமர்' போட்டியிடும் மீரட்
பாஜகவின் ஐந்தாவது பட்டியலில் 17 மாநிலங்களில் 111 வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், சுல்தான்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி தொடரான ராமாயணத்தில் ராமர் வேடத்தில் நடித்த நடிகர் அருண்கோவில் மீரட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் மேற்கு வங்கத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகானுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற சந்தேஷ்காலியைச் சேர்ந்த ரேகா பத்ரா என்ற பெண்ணுக்கும் பாஜக டிக்கெட் வழங்கியுள்ளது. அவர் பஷிர்ஹாட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.