பீகார் எம்எல்ஏ அனந்த் சிங் மகளின் பிரம்மாண்ட திருமணம்: உணவுக்காக அலைமோதிய கூட்டத்தால் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலம் மொகாமா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங்கின் மகள் சிவாங்கி சிங் திருமணம், அதன் பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்காகவும், அங்கு திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்காகவும் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பாட்னா மாவட்டத்தில் உள்ள நதவான் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற இத்திருமணத்தில், சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் ரன்விஜய் குமாரின் மகன் ரிஷிகேஷ் குமாரை சிவாங்கி கரம்பிடித்தார். 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படும் அனந்த் சிங், "இது ஒன்றும் சினிமா தியேட்டர் இல்லை, டிக்கெட் எடுப்பதற்கு; யார் வேண்டுமானாலும் வரலாம்" எனப் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்ததால், சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திருமணத்தில் திரண்டனர்.
பிரம்மாண்ட விருந்து
5 லட்சம் விருந்தினர்களுக்கான பிரம்மாண்ட விருந்தும், உணவுப் போட்டியும்
திருமணத்திற்கு வரும் 4 முதல் 5 லட்சம் விருந்தினர்களுக்காக 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
100 அடிக்கும் அதிகமான நீளத்தில் அமைக்கப்பட்ட தற்காலிகச் சமையலறையில், 500-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பல நாட்களாக உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டேங்கர் லாரிகள் மூலம் 10,000 கிலோவிற்கும் அதிகமான பால் கொண்டு வரப்பட்டு, 25 லட்சம் ரசகுல்லாக்களும் 50 லட்சம் குலாப் ஜாமூன்களும் தயார் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், மாலை நேரத்தில் உணவு பரிமாறத் தொடங்கியதும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், தட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் விருந்தினர்கள் குடிநீர் குவளைகள், செய்தித்தாள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் உணவை அள்ளிச் சென்றதும், இனிப்புகளுக்காக முண்டியடித்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
देखिए, किस तरह से लोग सब्जी लूटकर खा रहे हैं। अनंत सिंह की बेटी की शादी में कई लोगों को खाना तक नसीब नहीं हुआ। pic.twitter.com/hp5R7DgPUr
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) November 25, 2026
குதிரைப் பந்தயம்
மஹிந்திரா தார் பரிசுடன் நடைபெற்ற குதிரைப் பந்தயம்
திருமண விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக DJ இசை நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, 12 பிகா நிலப்பரப்பில் பிரம்மாண்ட குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 52 குதிரைகள் பங்கேற்றன.
வெற்றி பெறுபவருக்கு புதிய மஹிந்திரா தார் கார் முதல் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பந்தயத்தைக் காண இளைஞர்கள் மின்கம்பங்களின் உச்சியில் ஏறி அமர்ந்திருந்தனர்.
போட்டி நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் திடீரென பந்தயப் பாதைக்குள் புகுந்ததால், பாதுகாப்பு கருதிப் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்களால் சுமார் 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஹெலிபேட்
ஹெலிபேட் வசதி மற்றும் மணமகனுக்கு ₹3 கோடி சொகுசு கார் பரிசு
முக்கிய விருந்தினர்கள் வருகைக்காக திருமண மைதானத்தில் பிரத்யேக ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் உத்தரப் பிரதேச முன்னாள் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்து கலந்து கொண்டனர்.
அனந்த் சிங் தனது எஸ்யூவி காரின் சன்ரூஃப் வழியாக தொண்டர்களுக்கு கையசைத்தபடி சினிமா பாணியில் திருமணத்திற்கு வருகை தந்தது அனைவரையும் கவர்ந்தது.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற மணமகன் ரிஷிகேஷ் குமாருக்கு, ₹3 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார், 100 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் 80 கிராம் தங்க பிரேஸ்லெட் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.