சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்
உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த தி டெலிகிராப் என்ற செய்தி நிறுவனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மியான்மரில் இருக்கும் ஏழை மக்களை பணத்தை காட்டி மயக்கி அவர்களது உடல் உறுப்புகளை சட்ட விரோதமாக அப்பல்லோ மருத்துவமனைகள் வியாபாரம் செய்வதாக தி டெலிகிராப் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அப்படி பெறப்படும் உடல் உறுப்புகள் பணக்கார மியான்மர் நோயாளிகளுக்கு லாபத்திற்காக விற்கப்படுவதாகும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக, மியான்மர் கிராமங்களில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 30 லட்சம் ரூபாயிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட அப்பல்லோ மருத்துவமனை, ஆசியா முழுவதும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற உலகம் முழுவதிலுமிருந்து நோயாளிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சட்ட விரோத சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வாங்கப்படுகிறது என்பதையும் தி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பணக்காரரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் வாங்கப்படுகிறதாம். அதே வேளையில், உடல் உறுப்புகளை விற்கும் ஏழைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தி டெலிகிராப் கூறியுள்ளது.
குற்றசாட்டுகளை மறுத்த அப்பல்லோ மருத்துவமனை
ஆனால், மறுபுறம், அப்பல்லோ மருத்துவமனை அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயம் குறித்து நிறுவனத்திற்குள் விசாரணை நடத்த இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது. "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிர்வாகம் மறைமுகமாக உடந்தையாக இருந்தது அல்லது ஒத்துழைத்தது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றுலுமாக மறுக்கப்படுகிறது." என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் மீது குற்றச்சாட்டு
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சந்தீப் குலேரியா தான் இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்து வருவதாக இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தி டெலிகிராப் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டுகளை "தவறானது மற்றும் சிரிக்கத்தக்கது" என்று கூறி மறுத்துவிட்டார். 2016 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. 2016இல் இந்திரபிரஸ்தா மருத்துவமனை தொடர்பான சிறுநீரக ஊழல் வழக்கில் விசாரணைக்காக சந்தீப் குலேரியா அழைக்கப்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. டெல்லி எய்ம்ஸ் முன்னாள் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு அரசாங்கங்களிடம் இருந்து மோசடிக்காரர்கள் தப்பிப்பது எப்படி?
இந்தியா உட்பட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் உடல் உறுப்புகளை பணத்திற்கு விற்பது சட்ட விரோதமான செயலாகும். ஆனால், உறுப்பை தானம் செய்பவர்கள் குடும்ப உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அது சட்ட விரோதமாக கருதப்படாது. எனவே, மியன்மர் மற்றும் இந்திய அரசாங்கங்களிடம் இருந்து தப்பிக்க, மோசடி ஏஜென்டுகள் பொய்யான குடும்ப புகைப்படங்களை தயாரித்து, பொய்யான குடும்ப ஆவணங்களை உருவாக்கி எல்லாவற்றையும் சட்டப்படி செய்வது போல் சித்தரித்து மோசடி செய்துள்ளனர் என்கிறது தி டெலிகிராப். இதையெல்லாம், தி டெலிகிராப் அண்டர்கவர் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது. அந்த செய்தி நிறுவனத்தின் கூற்று படி, அப்பல்லோ மருத்துவமனைகளில் நடக்கும் 80% மாற்று அறுவை சிகிச்சைகள் சட்ட விரோதமானதாகும்.