Loading...
சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக அங்கிதா பண்டாரி பெற்றோர் இந்தியா கேட் முன்பு போராட்டம்: யார் இவர்கள்?
சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக அங்கிதா பண்டாரி பெற்றோர் இந்தியா கேட் முன்பு போராட்டம்

சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக அங்கிதா பண்டாரி பெற்றோர் இந்தியா கேட் முன்பு போராட்டம்: யார் இவர்கள்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 15, 2026
09:34 am

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்டின் ரிஷிகேஷில் படுகொலை செய்யப்பட்ட 19 வயது வரவேற்பாளர் அங்கிதா பண்டாரியின் பெற்றோர், துஷ்யந்த் குமார் கவுதம் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் டெல்லி இந்தியா கேட் பகுதியில் புதன்கிழமை மாலை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிதா கொலை வழக்கில் சிபிஐ விசாரணை முடியும் வரை அவரது பதவியேற்பை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா கேட் நடைபாதையில் கண்ணீருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அங்கிதாவின் பெற்றோரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்துத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

விவரங்கள்

விஐபி சர்ச்சையும், சிக்கிம் ஆளுநர் நியமனமும்

கடந்த 2022 செப்டம்பர் 18 அன்று வனாந்திரா ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணிபுரிந்த அங்கிதா படுகொலை செய்யப்பட்டு சிலா கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

இக்கொலை வழக்கில் ரிசார்ட்டின் உரிமையாளரும், முன்னாள் பாஜக நிர்வாகியின் மகனுமான புல்கித் ஆர்யா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அடையாளம் தெரியாத 'விவிஐபி' விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பாஜகவின் முன்னாள் தேசியப் பொதுச் செயலாளரான துஷ்யந்த் குமார் கவுதம் மீது அங்கிதாவின் குடும்பத்தினரும் செயற்பாட்டாளர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கவுதம் சிக்கிம் ஆளுநராக அக்டோபர் 12 அன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவிக்கான அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பை பயன்படுத்தி அவர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம் என அங்கிதாவின் பெற்றோர் அஞ்சுகின்றனர்.

கோரிக்கை

அங்கிதாவின் பெற்றோரின் உச்சபட்ச கோரிக்கை

சிபிஐ விசாரணை முழுமையடையும் வரை துஷ்யந்த் குமார் கவுதம் ஆளுநராக பொறுப்பேற்க அனுமதிக்குமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வலியுறுத்த உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில், உத்தராகண்ட் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வெளியே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா கேட்டில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அங்கிதா பண்டாரியின் பெற்றோர் மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை வியாழக்கிழமை கைது செய்தது.

இந்நிலையில், போராட்டக்காரர்களை காவல்துறை கடுமையாக நடத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதோடு, இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் இந்தக் கைதுகள் நடைபெற்றன, பின்னர் அவர்கள் அதிகாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT