ஆந்திராவில் ஆண்டுதோறும் 3 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் தொடக்கம்
ஆந்திராவில் வரும் தீபாவளி முதல் இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற தங்கவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்க இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதன்படி, வரும் தீபாவளி பண்டிகை முதல், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மூன்று எரிவாயு சிலிண்டர்களை மாநில அரசு இலவசமாக வழங்கும்.
இலவச எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கான தகுதி
இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்திற்கு தகுதி பெற வெள்ளை ரேஷன் கார்டு தேவைப்படும் என தெரிகிறது. இந்த அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களின் பெயரில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். மங்களகிரியில் உள்ள சிகே மாநாட்டில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எம்எல்சிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முதலில் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.