டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன், இருநாட்டு உறவுகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்ய முயற்சித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள், உள்ளிட்டவற்றை குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி உடன் அமெரிக்கா- இந்தியாவின் முயற்சியான கிரிட்டிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜி (iCET) திட்டத்தை மதிப்பாய்வு செய்ய, முதன்மை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா வந்தனர். பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பால் விவரிக்கப்படும், இந்தியா-அமெரிக்க உறவில், iCET திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு, காசா பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா ஆகியோருடன், இருநாடு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் தொடர்பாக ஃபைனர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கொள்கை சீரமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் ஆழமான விவாதங்கள் நடைபெற்றதாக, வெள்ளை மாளிகை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு தொடர்பான பிரச்சனைகள், செங்கடலில் சமீபத்தில் தாக்கப்பட்ட வர்த்தக கப்பல்கள், வர்த்தக கப்பல்களின் சுதந்திரமான பயணங்களுக்கு வழிவகுப்பது, போருக்கு பின் காசா எவ்வாறு இருக்க வேண்டும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா அமைத்த விசாரணைக் குழுவை வரவேற்ற அமெரிக்கா
"அமெரிக்காவில் கொடிய சதித்திட்டத்தை விசாரிப்பதற்காக இந்தியா ஒரு விசாரணைக் குழுவை அமைத்ததை ஃபைனர் வரவேற்றார்" என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க-கனடா குடிமகனான காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய, இந்திய அதிகாரியால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் சதித் திட்டம் தீட்டியதாக, அமெரிக்கா கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, இந்தியா ஒரு உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைந்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அதை அமெரிக்கா திங்கட்கிழமை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.