
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.
இந்தத் தாக்குதல் "நாட்டின் சூழலைக் கெடுக்க" நடத்தப்பட்டதாக அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்தது.
கூட்டத்தின் முடிவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் மத்திய அரசிற்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு,"அனைத்து கட்சிகளும் அரசாங்கத்துடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறின" என்றார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் கட்சித்தலைவர்களுக்குத் தெரிவித்தனர்.
நடவடிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அறைகூவல் விடுத்த எதிர்க்கட்சிகள்
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் உட்பட சில எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலைகளை எழுப்பின.
கூட்டத்தின் போது "பாதுகாப்பு குறைபாடு" ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கைக்கும் முழு ஆதரவை வழங்கியதாகவும் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,"கூட்டத்தில் இருந்த அனைவரும் பயங்கரவாத தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்து, அரசாங்கத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினர்" என்றார்.
எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை நேரடியாகக் கேட்க பிரதமர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டார்.
பாதுகாப்பு குறைபாடு
பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
கூட்டத்தின் போது, பல எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு நெறிமுறைகள் தோல்வியடைந்தது குறித்து கேள்விகளைக் கேட்டன.
"பாதுகாப்புப் படைகள் எங்கே இருந்தன? மத்திய ரிசர்வ் போலீஸ் படை எங்கே இருந்தது?" என்று பல தலைவர்கள் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பைசரன் பகுதியைத் திறப்பதற்கு முன்பு உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று அரசாங்கம் கூறியதாகக் கூறப்படுகிறது.
நடைமுறைப்படி, இந்த பகுதி ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு ராணுவத்தின் தாமதமான பதில் நடவடிக்கை குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.
அந்த இடம் 45-நிமிட நடைப்பயணம் செய்தே அடையமுடியும் என்றும், அத்தகைய அவசரநிலைகளை விரைவாகக் கையாள எந்த நிலையான இயக்க நடைமுறையும்(SOP) இல்லை என்றும் அரசு அதிகாரிகள் விளக்கினர்.