2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை
2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம். சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன்.14ம்.,தேதி செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துசென்ற பாதி வழியிலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் உயர்நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வரும்நிலையில், அவரது ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கிடையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தற்போது புழல் சிறை மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
ஆளுநர் ரவிக்கு எதிரான தனி தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார். மேலும், மாணவர்களுடனான ஓர் உரையாடலின் போது நிலுவையில் வைத்திருக்கும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். தொடர்ந்து சட்டப்பேரவையில், ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்னும் விதி திருத்தப்பட்டு, அவருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தினை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இந்த தீர்மானம் விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் குறித்த சர்ச்சை
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக.,கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையிலிருந்து 360மீ., கடலுக்குள் கண்ணாடி பாலம் அமைத்து அதன்மீது பொதுமக்கள் நடந்துச்சென்று பேனா நினைவுச்சின்னத்தினை பார்வையிடும் வகையில் ரூ.81 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தினையும் மாநில அரசு ஏற்பாடு செய்தது. அதில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான்,'பேனா நினைவு சின்னம் அமைத்தால், அதனை உடைப்பேன்'என்று மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனால் இத்திட்டத்திற்கு பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்ததால், அனைத்து துறை அனுமதி பெறப்பட்ட பின்னரே இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.
12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்
கடந்த ஏப்ரலில் தமிழக சட்டமன்றத்தில் தனியார் நிறுவனங்களில் 8 மணிநேர வேலைநேரத்தினை 12மணிநேரமாக உயர்த்தும் மசோதா பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவிற்கு தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஏப்ரல்.24ம்.,தேதி தமிழக அமைச்சர்கள் இதற்கு விளக்கமளித்தனர். அதன்படி, 12மணிநேரம் வேலை என்பது கட்டாயம் கிடையாது என்றும், 8மணிநேர வேலைநேரத்திற்கு பிறகு தொடர்ந்து 12மணிநேரம் வேலை செய்யலாமா?என்பதை தொழிலாளர்கள் தான் முடிவு செய்யவேண்டும். அந்த பரிசீலனை முடிந்தப்பின்னரே இதற்கான அனுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று கூறினர். மேலும், 4நாட்கள் வேலை பார்த்தால், 3நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், இச்சட்டம் நிறுவனங்களுக்கும் பொருந்தாது, மின்னணு-மென்பொருள் நிறுவனங்கள், தோல்-காலணி தயாரிக்கும் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறினார்.
காலை உணவு திட்டம் குறித்து தினமலர் வெளியிட்ட சர்ச்சை செய்தி
தமிழக அரசு அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை துவக்கியது. இத்திட்டம் குறித்து தினமலரில், 'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என்னும் அநாகரிக தலைப்பில் செய்தி வெளியானது. அதில், வீட்டில் உணவருந்திய மாணவர்களையும் மீண்டும் உணவருந்துமாறு வலியுறுத்தப்படுவதாகவும், இதனால் அவர்களுக்கு உடனே இயற்கை உபாதைகள் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது. இதுப்பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து தினமலர் ஆசிரியர் கி.ராமசுப்பு, இந்த செய்தி ஈரோடு-சேலம் உள்ளிட்ட மாவட்டப்பதிப்புகளில் மட்டுமே வெளியாகியுள்ளது என்றும், அம்மாவட்டங்களில் ஆர்.சத்யமூர்த்தி ஆசிரியராக கடந்த 23-ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்றும் கூறினார். தான் ஆசிரியராக பணிபுரியும் பதிப்புகளில் இச்செய்தி வெளியாகவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார்.
தமிழகம் vs தமிழ்நாடு - ஆளுநரின் சர்ச்சை கருத்து
தமிழ்நாடு என்னும் வார்த்தையினை விட தமிழகம் என்னும் சொல் தான் சரியானது என்று சர்ச்சை எழுப்பும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜனவரியில் கருத்து தெரிவித்திருந்தார். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் இந்த மாநிலங்கள் உருவானது என்பதால் பாரதத்தின் ஓர்பகுதி தமிழகம் என்பது தான் சரி என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், திமுக மூத்த தலைவரும், எம்.பி.மான டி.ஆர்.பாலு, ஆளுநர் 50-ஆண்டுகால திராவிட மாடலை விமர்சித்துள்ளார் என்றும், இக்கருத்துக்கள் ஆளுநர் மாளிகையில் இருந்து சொல்ல வேண்டியதில்லை, பாஜக தலைமையகமான கமலாயத்தில் கூறவேண்டியது என்றும் ஆவேசமாக பேசியிருந்தார். இவரைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.