'ராசாத்தி உன்னை' என பாடிய பழம்பெரும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்
செய்தி முன்னோட்டம்
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் நேற்று (ஜனவரி 9) காலமானார்.
திரை இசை உலகில் 60 ஆண்டுகளாக தனது காந்த குரலால் ரசிகர்களை மயக்கிய அவர், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
தனது தனித்துவமான குரலினால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன், பல விருதுகளுக்கு உரியவர்.
அவருக்கு தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, 4 முறை தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது மற்றும் 5 முறை கேரளா அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கிடைத்துள்ளது.
பின்னணி
பாடகர் ஜெயச்சந்திரனின் பின்னணி
1944ஆம் ஆண்டு கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் இசையில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார்.
"தாலாட்டுதே வானம்" பாடல், அவர் கமல்ஹாசன் படத்தில் பாடிய மிக பிரபலமான பாடலாக அமைந்தது. 80களில் வெளியான "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி", "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு" போன்ற மெலோடி பாடல்களால் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.
இன்றும் பலரின் பயண பாடல் லிஸ்டில் இவர் பாடிய பாடல் இடம்பெற்றிருக்கும். இரவு நேரத்தை அமைதியாக கடக்க நினைப்பவர்களுக்கு இவரது பாடல் நிச்சயம் அருமருந்து.
அவரது இறுதி பாடல் 'கிரீடம்' திரைப்படத்தில் "கனவெல்லாம்" என்ற பாடல் ஆகும்.
ஜெயச்சந்திரனின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.