திரையுலகில் பேரிழப்பு! பிரபல மூத்த நடிகர் நானா படேக்கர் மாரடைப்பால் காலமானார்
செய்தி முன்னோட்டம்
இந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான நானா படேக்கர் (75) மாரடைப்பு காரணமாக கோவாவில் காலமானார். இவரது மறைவு செய்தி இந்தியத் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது நானா படேக்கருக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக் குழுவினர் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டோனா பவுலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், காலை 5:20 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் முறைப்படி அறிவித்தனர். அவரது உடற்கூறாய்வு பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
கலைப்பயணம்
மறக்க முடியாத கலைப்பயணம்
1978 ஆம் ஆண்டு 'கமன்' திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய விஸ்வநாத் படேக்கர் எனும் நானா படேக்கர், இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி முத்திரை பதித்தார்.
'அங்குஷ்', 'பிரதிகாத்', 'சலாம் பாம்பே!', 'பரிந்தா', 'பிரஹார்', 'கிராந்தவீர்', 'அக்னி சாட்சி' மற்றும் 'அப் தக் சப்பன' உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது அழுத்தமான நடிப்பு இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
மேலும், 'வெல்கம்' திரைப்படத்தில் 'உதய் ஷெட்டி' கதாபாத்திரத்தில் நடித்து நகைச்சுவையிலும் பட்டையைக் கிளப்பினார்.
இது தவிர தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'பொம்மலாட்டம்' மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் 'காலா' படத்திலும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.