
விக்ரமை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு
செய்தி முன்னோட்டம்
2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-ன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் முதல் பாகத்தில் நடித்த, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கின்றனர். இவர்களுடன் தற்போது மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு இணையப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
விவரங்கள்
ஃபஹத் ஃபாசிலுடன் இணையும் சூரஜ் வெஞ்சாரமூடு
ஜெயிலர் 2 படத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு இணைவதை நியூஸ்18 உறுதிப்படுத்தியுள்ளது. நடிகர் சூரஜ் தனது இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர். இவர் சமீபத்தில் வெளியான விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது ஜெயிலர் 2 இல் ஃபஹத் ஃபாசிலுடன் இணைகிறார். சென்னை, கோயம்புத்தூர், ஆனைகட்டி (தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதி) மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் முடிவடையும் என்று ரஜினிகாந்த் முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.