சைமா விருதுகள் 2024: தமிழில் விருது வென்றவர்களின் முழு பட்டியல்
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் சைமா என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான சைமா விருது வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 15 அன்று துபாயில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ரமிற்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது அன்னபூர்ணா படத்தில் நடித்த நடிகை நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது. மேலும், இயக்குனர் ரா.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானி பெற்றார்.
சிறந்த கிரிட்டிக்ஸ் நடிகர் விருது
2023ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை யோகி பாபு பெற்றார். மேலும் கிரிட்டிக்ஸ் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மாவீரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இதே பிரிவில் சிறந்த நடிகைக்கான விருது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது. அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற போர்த் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவிற்கு சிறந்த அறிமுக இயக்குனர் விருது வழங்கப்பட்டுள்ளது.
துணை நடிகர்களுக்கான விருது
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மகனாக நடித்து கவனம் ஈர்த்த வசந்த் குமார் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். இதே பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை மாவீரன் படத்திற்காக நடிகை சரிதா பெற்றார். ஜெயிலர் படத்தில் வெளியான ரத்தமாரே பாடலுக்கான இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். சிறந்த பாடகர் விருதை குட் நைட் படத்தில் வெளியான நான் காலி பாடலைப் பாடிய ஷான்க்கு வழங்கப்பட்டது. மாமன்னன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேனீஸ்வர்க்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கப்பட்டது.