வேட்டையன் படத்திற்கு முன்னதாக இயக்குனர் ஞானவேலிடம் ரஜினிகாந்த் சொன்ன அந்த ரகசியம்; ஆடியோ வெளியீட்டு விழாவில் ஓபன் டாக்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "ஒரு படம் வெற்றி கொடுத்தால் அடுத்த படம் வெற்றி கொடுப்பது ரொம்ப கஷ்டம், அதே ஒரு படம் தோல்வி அடைந்தால், அடுத்த படம் வெற்றி கொடுப்பதும் ரொம்ப கஷ்டம்." என்றார்.
இயக்குனர் வெற்றிமாறன் குறித்து மேடையில் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மேலும், "நல்ல இயக்குனர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. வெற்றிமாறன் போன்று நல்ல கதைகளை படமாக எடுக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், மாஸ் ஹீரோக்களுக்கு போதிய இயக்குனர்கள் இல்லை. ஒரு மாஸ் ஹீரோ வெற்றி பெற தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் மிகவும் முக்கியம். ஜெய் பீம் படத்தை பார்த்து வியந்த என்னிடம் ஞானவேல் வந்ததும், நீங்கள் நல்ல கருத்துடைய படங்களை எடுக்கிறீர்கள், ஆனால் எனக்கு கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்கிறார்கள். அதை திருப்பி எடுக்க வேண்டும், மக்களை மகிழ்விக்க வேண்டும். அதுபோல் உங்கள் கருத்தோடு கமர்ஷியலாக உருவாக்க முடியுமா எனக் கேட்டேன்." என்றார்.
பத்து நாட்கள் டைம் கேட்ட இயக்குனர் ஞானவேல்
ரஜினிகாந்த் தொடர்ந்து கூறுகையில், "ஞானவேல் ஒரு பத்து நாட்கள் வேண்டும் என கேட்டுச் சென்றார். ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலேயே என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, லோகேஷ் மற்றும் நெல்சன் மாதிரி என்னால் படம் எடுக்க முடியாது. ஆனால், ரசிகர்களுக்கு உங்களை வேறொரு கண்ணோட்டத்தில் காட்ட வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார். அதற்கு நான், அவர்கள் மாதிரி மட்டும் படம் வேண்டும் என்றால் அவர்களிடமே நான் போயிருப்பேன், நீங்கள் உங்கள் பாணியில் கதை எழுதி கொண்டு வாருங்கள் என்றேன். லைகா எனது சொந்த தயாரிப்பு நிறுவனம் போல, நான் நடித்தாலே சம்மதம் சொல்லிவிடுவார்கள்." என்றார்.
அமிதாப் பச்சனை ஒப்புக்கொள்ளவைத்த ஞானவேல்
ரஜினிகாந்த் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞராக கூறி வந்த ஞானவேல், இசைக்கு 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்றார். நான் உங்களுக்கு 100 சதவீதம் என்றால், எனக்கு ஆயிரம் சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்றேன். அமிதாப் பச்சனையும் என்னையும் இணைத்து இந்தியில் படம் எடுக்க பல இயக்குனர்கள் கேட்டனர். ஆனால், இருவருமே ஒத்துக்கொள்ளவில்லை. இந்த படத்தில் நடிக்க அமிதாப் பச்சனிடம் பேச தயாரிப்பாளர் அனுமதியோடு நீங்கள் போய் முயற்சி செய்யுங்கள் என ஞானவேலை அனுப்பினேன். அடுத்த இரண்டு நாளில் அமிதாப் பச்சன் ஓகே சொல்லிவிட்டார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது." என்றார்.
ஃபகத் ஃபாசிலுக்கு புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தொடர்ந்து, "ஃபகத் ஃபாசிலுக்கு கதையை சொல்லிய பிறகு பணம் கொடுக்கவில்லை. ஆனாலும், அவர் நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டதாக ஞானவேல் கூறினார். அவரை போன்று ஒரு எதார்த்த நடிகரை நான் பார்த்ததே இல்லை, ஹாட்ஸ் ஆப் டு யூ ஃபகத் ஃபாசில், அசாத்திய நடிகர் அவர். அனைத்தையும் ஓகே செய்த பிறகு கதை எழுத இரண்டு மாதங்கள் வேண்டும் என கூறினார். நான் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். இதனால் அவர்களிடம் கேட்க வேண்டும் என சொல்லி அனுப்பிவிட்டேன். அவர்கள் லோகேஷ் கனகராஜிடம் கேட்குமாறு சொல்லிவிட்டனர். அவரிடம் கேட்டஉடனே இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ள சொல்லிவிட்டார். அப்படியென்றால் அவர் இன்னும் கதையையே ஒழுங்காக செய்யவில்லை என அர்த்தம்" என்றார்.
அனிருத்தை பிள்ளை மாதிரி எனக் கூறிய ரஜினிகாந்த்
அனிருத் குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், "அவர் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிக்கு செல்கிறார். அவர் வருகிறார் என்றாலே அனைத்து டிக்கெடுக்களும் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. குறிப்பாக, அமெரிக்காவிற்கு அவர் சென்றபோது பத்தாயிரம் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. ஆனால், கச்சேரியை நடத்தும் நாளில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இருந்தாலும், ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டு அந்த கச்சேரியை 2.30 மணி நேரம் நடத்தி முடித்தார். உழைக்கும் நேரத்தில் உழைக்க வேண்டும். ஒரு படத்தை பார்த்து விட்டு, அது ஓடும், ஓடாது என்பதை வெளிப்படையாக சொல்லிவிடுவார். அனிருத் எனக்கு பிள்ளை மாதிரி. இந்த படம் உண்மையாக வெற்றி அடைய வேண்டும். குறிப்பாக, இயக்குநர் ஞானவேலுக்காக கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும்." என்றார்.