ரஜினியின் இடத்தை நிரப்ப போகும் அடுத்த சூப்பர்ஸ்டார் நடிகர் யாராக இருக்கும்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் வரும் டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த நாளை திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டு வரும் நிலையில் அவருடைய பழைய படங்கள் சிலவும் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. கிட்டத்தட்ட மூன்று சதாப்தங்களாக தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத இடத்தில் ரஜினி கோலோச்சி வருகிறார். அவர் இந்த இடத்தை அடைய எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அவர் தேர்வு செய்த பாதையும் காரணம். சிறுவர்கள் முதல், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பல தரப்பட்ட மக்களை தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் நடிப்பால் வசியம் செய்து வைத்திருக்கிறார் ரஜினி. எனினும் அடுத்த தலைமுறை நடிகர்கள் பலரும் அவரது இடத்தை பிடிக்கவே போட்டி போடுகின்றனர். அவர்களுள் யார் உங்கள் அடுத்த தேர்வு?
'அவர் இடத்தை யாரும் நிரப்ப முடியாது' என முதல் தலைமுறையினர் கருத்து
ரஜினிகாந்தின் அறிமுகம் முதல் அவரை பார்த்து ரசித்து வரும் முதல்தலைமுறையினர் பலரும் அவரின் இடத்திற்கு யாரையும் நினைத்து பார்க்க முடியாது என கருதுகிறார்கள். அவர்கள் ரஜினிகாந்தின் மாஸ் படங்களையும் பார்த்து ரசித்தவர்கள், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும் என தலைவரின் பிரமாதமான நடிப்பையும் பார்த்து வியந்தவர்கள். ரஜினியின் திரையுலக வெற்றியில் இந்த ரசிகனின் பங்கு இன்றியமையாதது. அவரின் சூப்பர்ஸ்டார் பதவிக்கு வித்திட்டவர்கள் இவர்கள் எனலாம். அவர்களின் கருத்துப்படி, அந்த சூப்பர்ஸ்டார் நாற்காலியை நிரப்ப வேறு யாரும் வர முடியாது என்கிறார்கள். சிவாஜி- MGR போல, கமல்- ரஜினி என்பது வேறோர் ஆளால் நிரப்ப முடியாத இடம் என்பது அவர்களின் கருத்து.
சூப்பர்ஸ்டார் நாற்காலியை அடைந்துவிட்ட விஜய் என்பது இவர்களின் கருத்து
ரஜினியினை மாஸ் ஹீரோவாக கண்டு ரசித்த இந்த தலைமுறை, அவரது இடத்தில் விஜயை ஆராதிக்க தயாராகிவிட்டது. விஜய் திரையுலகை விட்டு விலகி சினிமாவிற்குள் நுழைந்தாலும், அவரை உச்ச நட்சத்திரமாக வழிபட்டே வருகிறது இந்த தலைமுறை. அவர் நின்றால் மாஸ், நடந்தால் மாஸ் என அவரை கொண்டாடி வருகிறது. அந்த மாஸ் அப்பீல் தந்த நம்பிக்கையிலேயே விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். இந்த தலைமுறையினரே அரசியல் முதல் பட வெற்றி வரை தீர்மானிப்பதில் அதிக ஆதிக்கம் செலுத்துவதால் இவர்களின் முடிவு எந்த ஒரு விஷயத்திலும் முக்கியமானதாகவே பார்க்கப்பட வேண்டும். ரசிகர்களை கவர்வதில் ஆரம்பத்தில் சிம்புவிற்கு அதிக வாய்ப்பிருந்தால், அவர் இடையில் பல தோல்வி படங்களை தந்ததால், விஜய் அவரை ஓவர்டேக் செய்துவிட்டார் என்றே கூற வேண்டும்.
குட்டிஸ்களை கவர்ந்த சிவகார்த்திகேயன்
இன்றைய இளைய தலைமுறையினரை பொறுத்த வரை, ரஜினியை போல மாஸ், ஸ்டைல் மற்றும் காமெடி செய்வதில் அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயனை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற திரை ஆளுமை சிவகார்த்திகேயனிடம் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். எனினும் ரஜினியின் சூப்பர்ஸ்டார் நாற்காலியை சிவகார்த்திகேயன் அடைய இன்னும் பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும் என்பது எங்கள் கருத்து. அதே நேரத்தில் தனுஷின் நடிப்பிற்கும் ரசிகர்கள் இருப்பதால், மொழிகள் தாண்டி ரசிகர்களை கவர்வதில் ரஜினியின் இடத்தில் அவரையும் பார்க்கிறார்கள் ரசிகர்கள். எது எவ்வாறாக இருப்பினும், 'சூப்பர்ஸ்டார்' என்ற நாற்காலி அருகே எவர் வந்தாலும், ரஜினி என்ற தனிமனிதனின் இடத்தை நிரப்ப வேறு எவராலும் முடியாது என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.