
தமிழ் புத்தாண்டு அன்று வெளியான தமிழ் திரைப்படங்கள்: ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பண்டிகையும், திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.
பண்டிகை காலங்களில் சினிமாக்கள் வெளியிடுவது வாடிக்கை.
இந்த விழாக்காலங்களில் மக்கள் திரையரங்குகளில் குவிவதும் வழக்கம்.
தங்களது அபிமான நட்சத்திரங்களை பெரிய திரையில் கண்டு ரசிப்பது ரசிகனின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
அதனால் நட்சத்திரங்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் இது போன்ற பண்டிகை நாட்களை குறி வைத்து படத்தை வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் ஏப்ரல் 14 கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் சில படங்கள் வெளியாகியுள்ளன.
அவை என்னென்ன என பார்ப்போமா?
திரைப்படங்கள் வெளியீடு
பல ஆண்டுகளாக தமிழ் புத்தாண்டு அன்று படங்கள் வெளியாகியுள்ளன
ஏப்ரல் 14 என்ற தேதி தமிழ்த் திரைப்படங்கள் வெளியான முக்கியமான நாளாக உள்ளது.
1965-ல் வெளியான வெண்ணிற ஆடை, 1967-ல் பட்டினத்தில் பூதம், 1979-ல் வான் மேகங்களே, 1987-ல் எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் இந்த நாளில் வெளியாகி பார்வையாளர்களின் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தின.
இவை பண்டிகை நாளை மட்டும் குறி வைத்து வெளியாவது இல்லை.
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.
அந்த நாளில் பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக இருக்கும் எனவும், ஒரு வியாபார நோக்கத்திலும் இந்த நாளில் வெளியாகிறது.
ஒரு சில பெரிய படங்கள் வெளியாகும் நேரத்தில், குறைந்த பட்ஜெட் படங்கள் தேதி மாற்றம் செய்தி அதே மாதத்தில் வெளியான கதையும் உள்ளது.
சமீபத்திய வெளியீடுகள்
சமீபத்தில் தமிழ் புத்தாண்டிற்கு வெளியான தமிழ் திரைப்படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ல் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது சந்திரமுகி திரைப்படம். ஜோதிகா, நயன்தாரா, பிரபு என நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் வசூலை வாரிக்குவித்தது.
அதேபோல, விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான 'தெறி' ஏப்ரல் 14, 2016-ல் வெளியாகி மகத்தான வெற்றியைப் பெற்றது.
தனுஷ் முதன்முதலாக இயக்கிய 'பா. பாண்டி' திரைப்படமும், ஏப்ரல் 14, 2017-ல் வெளியாகி அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
2022-இல் வெளியான விஜயின் 'பீஸ்ட்' திரைப்படம் விமர்சனரீதியாக குறைகளை பெற்றிருந்தாலும், மக்களால் விரும்பப்பட்டது.
இந்த வருடம், நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லீ', புத்தாண்டிற்கு நான்கு நாட்கள் முன்னர் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது.