லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன?
சென்னையில் நேற்று லியோ திரைப்படத்தின் வெற்றி விழா, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது. விழாவில் நான்கு மாதங்களுக்கு பின் மேடை ஏறிய விஜய், லியோ படத்தில் இடம்பெற்றிருந்த 'நான் ரெடி தான் வரவா' பாடலை பாடி, நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் அரசியல் வருகை முதல், சூப்பர் ஸ்டார் சர்ச்சை வரை அனைத்திற்கும் நடிகர் விஜய் பதில் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
சமூக வலைதளத்தில் ஏன் இவ்வளவு கோபம், நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய விஜய், ஒரு குட்டி கதை ஒன்றையும் கூறினார். காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போறாங்க, அங்க காக்கா, முயல், கழுகு, யானை என்று சொன்னதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதற்கு விஜய், காடு என்றால் எல்லாம் இருக்கும் தானே என்று கூறி பேச்சை தொடர்ந்தார். வில் அம்பு கொண்டு போன ஒருவர் முயலை அடிச்சிட்டார். மற்றொருவர் யானையை அடிக்கச் முயற்சி செய்து தோற்றுவிட்டார். இதில் யார் வெற்றியாளர்? நம்மால் எதை ஈசியா செய்ய முடியுதோ அதை செய்வது வெற்றி அல்ல, செய்ய முடியாததை செய்து காட்டுவது தான் வெற்றி என பேசினார்.
சினிமாவை சினிமாவாக பாருங்கள்- விஜய்
தொடர்ந்து பேசிய விஜய் சர்ச்சையான லியோ பட பாடலுக்கும் பதில் அளித்தார். "விரல் இடுக்கில் தீப்பந்தம்" என்றால் சிகரெட்டை நினைக்காதீர்கள், ஏன் அது பேனாவாக இருக்கக் கூடாது என என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று கூறிய விஜய், நம் வாழ்வில் பல்வேறு தீய விஷயங்கள் உள்ளன, அதில் நல்லதை மட்டும் தேர்வு செய்ய ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்
லியோ வெற்றி விழாவில், நீண்ட காலமாக இருந்து வந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பெயரை அடைமொழியுடன் கூறிய விஜய், புரட்சித்தலைவர் என்றால் ஒருவர் தான், நடிகர் திலகம் என்றால் ஒருவர் தான், கேப்டன் என்றால் ஒருவர் தான், உலக நாயகன் என்றால் ஒருவர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான், தல என்றால் ஒருவர் தான் என தெரிவித்தவர், தளபதி என்பவர் மன்னர் ஆணையிடுவதை நிறைவேற்றுபவர் என்றும், மக்களே என்றும் அவரின் மன்னர்கள் எனவும், மக்கள் ஆணையிடுவதை தான் செய்து விட்டு போவதாகவும் அவர் சொல்லி முடித்தார்.
"கப்பு முக்கியம் பிகிலு"
பின்னர் நெறியாளர் 2026 ஆம் ஆண்டு பற்றி கேட்டதற்கு, நகைச்சுவையாக நடிகர் விஜய் பதிலளித்தார். முதலில் அவர் 2025 ஆம் ஆண்டுக்கு பின்னர் வருவது 2026 ஆம் ஆண்டு எனக் கூறினார். நெறியாளர் மீண்டும் கேட்க, 2026 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை நடைபெறும் என மீண்டும் நகைச்சுவையாக தெரிவித்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு 2026 ஆம் ஆண்டு என்று கேட்டதற்கு, "கப்பு முக்கியம் பிகிலு" என பதில் அளித்தார். முன்னதாக விஜய் ஆட்சி அமைத்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு, அமைச்சரவையில் எந்த துறை வழங்குவார் என யூகத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டதற்கு, போதைப்பொருள் ஒழிப்புத்துறை என புதிதாக ஒன்றை உருவாக்கி, அதை லோக்கேசுக்கு வழங்குவதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.