₹34 லட்சம் மதிப்புள்ள கேமராவை பயன்படுத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆச்சரியம்
சமூக ஊடகமான யூட்யூபின் வளர்ச்சி ஒவ்வொரு நபரும் பிரபலமாகும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் பிரபலமடைவதுடன் பணமும் ஈட்டி வருகின்றனர். இந்த வகையில் 'வில்லேஜ் குக்கிங்' சேனல் நடத்தும் குழுவினர் யூடியூப்பில் தொடங்கி சினிமா வரை பிரபலம் அடைந்துள்ளனர்.மேலும் யூட்யூபில் மிக விலை உயர்ந்த கேமராவை பயன்படுத்தும் சேனல் என்ற பெயரையும் அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-இடம் இருந்து பெற்றுள்ளனர். 'விக்ரம்' திரைப்படத்தில் இவர்கள் ஒரு காட்சியில் நடித்திருந்த நிலையில், 'லியோ' திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற ஒரு நேர்காணலில் காணொளி வாயிலாக இவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
ரெட் ராப்டர் வகை கேமராவை பயன்படுத்தும் யூடியூப் குழுவினர்
மேலும் அந்த நேர்காணலில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் தாங்கள் புதிதாக வாங்கிய கேமரா ஒன்றையும் லோகேஷ் கனகராஜ் இடம் காட்டினர். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட லோகேஷ் கனகராஜ், "எனக்குத் தெரிந்து ரெட் ராப்டர் வகை கேமராவை பயன்படுத்தி யூடியூப் வீடியோ எடுக்கும் குழுவினர் நீங்கள்தான்" என பாராட்டினார். ₹34 லட்சம் மதிப்பிலான ரெட் ராப்டர் கேமராவிற்கு அடுத்த மாடலான, "ரெட் வி ராப்டர் எக்ஸ்எல்" மாடல் கேமராவில் லியோ திரைப்படம் சுமார் ₹300 கோடி செலவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு எடுத்திருந்த வீடியோவை, யூடியூபில் இதுவரை 6 கோடி பேர் பார்த்துள்ளனர்.