ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு
தீபாவளிக்கு வழக்கமாக வெளியாகும் விஜய், அஜித் படங்கள் இம்முறை வெளியாகவில்லை. அந்த சோகத்தை போக்குவதற்காக நமக்கு தீபாவளி விருந்தளிக்க பல வித்தியாசமான படங்கள் காத்திருக்கின்றன. நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஜப்பான்- நடிகர் கார்த்தியின் 25வது படம். இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், திருச்சியில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை தழுவி படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஜிகர்தண்டா டபுள் X'
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், SJ சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் ஒரு மாதத்திற்கு முன் வெளியாகியிருந்த நிலையில், படத்தில் கார்த்திக் சுப்புராஜின் 'டச்' இருந்ததை பார்க்க முடிந்தது. சமீப காலங்களில் ராகவா லாரன்ஸை, பேய் படங்களில் மட்டும் பார்த்து வரும் நாம், இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரை பார்க்கலாம். மேலும் இது வழக்கமான 'கார்த்திக் சுப்புராஜ் படமாக' இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
'தி மார்வெல்ஸ்'
மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், 'தி மார்வெல்ஸ்' திரைப்படம் நவம்பர் 10 ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் சீக்குவலான இத்திரைப்படம், ஒரு புதுவிதமான மார்வெல் படமாக இருக்கும் என படத்தின் இயக்குநரான நியா டகோஸ்டா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். கேப்டன் மார்வெல் 'கரோல் டான்வர்ஸ், 'மிஸ் மார்வெல்' கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகியோர் ஒருசேர திரையில் வருவதை பார்க்க தானும் ஆவலாக இருப்பதாக படத்தின் இயக்குனர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'டைகர் - 3'
பாலிவுட் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த சல்மான் கான் நடித்துள்ள டைகர்- 3 திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. நவம்பர் 9ஆம் தேதி வெளியாகும் திரைப்படம், ஸ்பை யூனிவர்சின் கீழ் வருவதால் ஷாருக்கானின் 'பத்தான்' கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. யஷ் ராஜ் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இம்ரான் ஹஷ்மி, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 'பத்தான்', 'கிசி கா பாய் கிசி கி ஜான்', 'டைகர் - 3' என ஒரே வருடத்தில் அடுத்தடுத்து வெளியாகும் சல்மான்கான் படங்களால், 'பாய்' ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தீபாவளியை தவறவிட்ட படங்கள்
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'ரைடு' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இருந்த போதும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை. வெள்ளைக்கார துரை திரைப்படத்திற்கு பின், இத்திரைப்படத்தில் ஸ்ரீவித்யாவும், விக்ரம் பிரபுவும் இணைந்துள்ளனர். கார்த்திக் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் இன்னும் முடிவடையாததால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.