LOADING...
ரிலீஸ் ஆகுமா ஜன நாயகன்? தேர்தல் ஆணையத்திடம் தஞ்சம் புகுந்த விஜய்யின் படம்
'ஜன நாயகன்', தணிக்கை சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது

ரிலீஸ் ஆகுமா ஜன நாயகன்? தேர்தல் ஆணையத்திடம் தஞ்சம் புகுந்த விஜய்யின் படம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2026
12:47 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பான கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்', தணிக்கை சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. தற்போது இத்திரைப்படத்தின் எதிர்காலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் எனத் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் படத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுக்கக் கூடுதல் காலம் எடுக்கும் என்பதால், 'ஜன நாயகன்' திரைப்படம் தேர்தலுக்குப் பிறகே வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிபீடியா போன்ற தளங்களில் ஏப்ரல் 30 தற்காலிக ரிலீஸ் தேதியாக குறிப்பிடப்பட்டாலும், தற்போதைய சூழலில் அது உறுதியாகத் தெரியவில்லை.

பின்னணி

இது வரை நடந்தது என்ன?

ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம், காட்சிகளில் இருந்த அரசியல் மற்றும் சில உணர்வுபூர்வமான வசனங்கள் காரணமாக தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கலைச் சந்தித்தது. தயாரிப்பு நிறுவனம், KVN Productions சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. எனினும், தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுதணிக்கை குழுவின் ஆய்வுக்குப் படத்தை உட்படுத்த வேண்டும் என்ற நிலையே நீடித்தது. மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக நேற்று, மார்ச் 17, மும்பையில் மறுதணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்து முடித்தனர்.

பரிந்துரை

தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை ஏன்?

தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 1. அரசியல் உள்ளடக்கம்: இப்படத்தில் தற்போதைய அரசியல் சூழலைத் பிரதிபலிக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2. TVK போட்டியிடும் சூழல்: விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், இப்படம் வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, படத்தை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பார்வையிட்டு, "ஆட்சேபனை இல்லை" எனத் தெரிவித்தால் மட்டுமே தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட முடியும்.

Advertisement