ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப், ஆலியா பட்டை தொடர்ந்து டீப்ஃபேக்கில் சிக்கிய பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப் மற்றும் ஆலியா பட்டை தொடர்ந்து, ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டீப்ஃபேக்கில் சிக்கியுள்ளார். இவர் தொடர்பான டீப்ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பரவி வரும் பிரியங்கா சோப்ராவின் டீப்ஃபேக்கில், அவர் ஒரு நிறுவனத்திற்கு ப்ரமோஷன் செய்வது போன்ற, அதில் அவரது ஊதியத்தை சொல்வது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகைகளுக்கு உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காட்சிகளை போல் அல்லாமல், இந்த காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வீடியோவில் பிரியங்கா சோப்ராவின் குரலை வைத்து அது போலி என கண்டறிய முடியும்.
டீப்ஃபேக்கால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகள்
கடந்த மாதத்தின் தொடக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகம், பிரிட்டிஷ்-இந்தியா இன்ஃப்ளுயன்சரான ஜாரா படேல் என்பவரது உடல் உடன் டீப்ஃபேக் செய்யப்பட்டது. இதில், ஜாரா படேல் ஆபாசமாக உடை அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், டைகர் 3 திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் தொடர்பான ஒரு காட்சி டீப்ஃபேக் செய்யப்பட்டு பரப்பப்பட்டது. டிக்டாக் இன்ஃப்ளுயன்சரான ரோஸி பிரீன் கேமரா முன் உடை மாற்றுவது போன்ற வீடியோவில், கஜோலின் முகம் டீப்ஃபேக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆலியா பட் கட்டிலில் அமர்ந்தபடி கேமராவை நோக்கி ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது போன்ற டீப்ஃபேக் வீடியோவும் வைரலானது.
டீப்ஃபேக்க்கு எதிரான செயல் திட்டத்தை வகுக்கும் மத்திய அரசு
டீப்ஃபேக் தொடர்பான விவகாரங்களை தீவிரமாக எடுத்துள்ள மத்திய அரசு, இதில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தது. மேலும். கடந்த மாதம் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், டீப்ஃபேக்கை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை நடைபெற்றது. இதன் முடிவில், 10 நாட்களுக்குள் டீப்ஃபேகுகளுக்கு எதிரான நான்கு படி செயல் திட்டம் உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.