#குஷ்பு 53- கடவுள் மறுப்பு முதல் ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் வரை குஷ்பு குறித்து பலரும் அறியாத 5 தகவல்கள்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவரான குஷ்பூ இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகை குஷ்பூ செப்டம்பர் 29 1970 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தவர். நடிகை, அரசியல்வாதி, தொலைக்காட்சி தொகுப்பாளர், பெண்ணியலாளர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை குஷ்பு. நடிகை குஷ்பு பற்றி பலரும் அறியாத அதே சமயத்தில் சுவாரசியமான ஐந்து தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரசிகர்களால் வழிபடப்பட்ட நடிகை குஷ்பு
சினிமாவில் நடிகை குஷ்பூ உச்சத்திலிருந்த போது அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடினார். தமிழ்நாட்டில் ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட முதல் நடிகை குஷ்பூ. ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட குஷ்பூ, ஒரு கடவுள் மறுப்பாளர் என்பது பலரும் அறியாதது. இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியவர், சாதியாலும் மதத்தாலும் மக்கள் பிரிந்திருக்கும் இந்நாட்டில், ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவின் ரிச்மண்ட் கால்பந்தாட்ட கிளப்பில், குஷ்பூ கௌரவ உறுப்பினராக உள்ளார். நடிகை குஷ்பூ அந்த கிளப்பின் நம்பர் ஒன் டிக்கெட் ஹோல்டர் ஆவார். இந்த கௌரவத்தை 2016 ஆம் ஆண்டு அந்த கிளப் அவருக்கு வழங்கியிருந்தது.
நடிகை குஷ்பூ சர்ச்சைகளும்
நடிகை குஷ்பூ என்றைக்குமே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்தியர்கள் அவர்களது எதிர்கால மனைவிகள் கற்புடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என கருத்துச்சொல்லி சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், மேக்சிம்(Maxim) என்ற ஆங்கில பத்திரிக்கை இந்தியாவில் வெளியிட்ட தனது முதல் பிரதியில் குஷ்புவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அது மார்ஃபிங் செய்யப்பட்டது என குஷ்பூ அந்த பத்திரிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்து கடவுளுக்கான ராமர், கிருஷ்ணர் உள்ளிட்டவர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சேலையை கட்டி சர்ச்சையில் சிக்கினார். இவர் மீது இந்து கடவுள்களை அவமதித்ததாக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்
நடிகை குஷ்பு மிகப்பெரிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர். இந்தியாவில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டிருந்த போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர். ஜல்லிக்கட்டு போராட்டங்களின் பொழுது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல தேசிய ஊடகங்களில் இவரது குரல் எதிரொலித்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி உள்ளார். மேலும் இவர் ஆஸ்திரேலியா பயணித்து அங்கு காளைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது என பார்த்து வந்ததாகவும் தகவல்கள் உள்ளன.