Qualcomm நிறுவனத்தில் ஆட்குறைப்பு: இந்தியாவில் மட்டும் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்
செய்தி முன்னோட்டம்
உலக அளவில் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் நிறுவனம், தனது செலவுக் குறைப்பு மற்றும் வணிக மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெருமளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பல்வேறு வசதிகளில் இருந்து சுமார் 1,000 ஊழியர்கள் வரை பணியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, குவால்காம் நிறுவனம் தனது மொத்த உலகளாவிய பணியாளர்களில் (52,000 பேர்) சுமார் 7 சதவீதத்தினரை, அதாவது தோராயமாக 3,600 பேரை பணியிலிருந்து விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா
இந்தியாவில் குவால்காம் நிறுவனத்தின் நிலை
குவால்காம் நிறுவனத்திற்கு பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என்.சி.ஆர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இந்நிறுவனத்தில் சுமார் 20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது மூத்த பொறியாளர்கள் மற்றும் அண்மையில் பணியில் சேர்ந்த புதிய பணியாளர்கள் என இரு தரப்பினரையும் பாதித்துள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில் மேலும் ஒரு கட்ட ஆட்குறைப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து நிறுவனத்தின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வக் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
விவரங்கள்
பணியிடத்திலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் பகிர்ந்த விவரங்கள்
ரெடிட் தளத்தில் `anonymous_Practical` என்ற ஐடி கொண்ட குவால்காம் ஊழியர் ஒருவர், தான் வேலை இழந்துவிட்டதாகக் கூறி தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
"என் மேலாளர் என்னைத் தொடர்புகொண்டு 1:1 பேசுகையில், நான் வேலையிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்தார். வணிகத் தேவைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்" என்றார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டு பேக்கேஜ் பற்றிய விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, 3 மாத ஊதியம் + பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு ஆண்டிற்கும் தலா 1 மாதச் சம்பளம்; குறிப்பிட்ட நாட்களுக்குள் (2-3 நாட்கள்) பணிநீக்க ஆவணங்களில் கையெழுத்திட்டால் கூடுதலாக 1 மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்
பணிநீக்கத்திற்கான காரணங்கள் என்ன?
சமீபத்திய காலாண்டில் மொபைல் வருவாய் 25 சதவீதம் வரை சரிவடைந்ததைத் தொடர்ந்து குவால்காம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, டேட்டா சென்டர்கள் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்து வருவதுடன், செலவினங்களைக் குறைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
கடந்த மாதம் குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கிறிஸ்டியானோ அமோன், நிறுவனத்தின் ஆண்டு மதிப்பாய்வுக்குப் பிறகு செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஆட்குறைப்பு இருக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் மட்டும் உலகளவில் 350-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் 1,42,000-க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.