சீன உளவு தொடர்பு முதல் கள்ளத்தொடர்பு வரை: பதவியை இழக்கும் அபாயத்தில் Nvidia CEO ஜென்சன் ஹுவாங்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் தயாரிப்பில் உலகளாவிய ஆதிக்கம் செலுத்தி வரும் என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனிப்பட்ட உறவுகள் தொடர்பான முறைகேடுகள், சீன உளவுத்துறை தொடர்பு மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருடன் உள்ள கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரை பதவியிலிருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்க என்விடியா வாரியம் புதன்கிழமை கூடவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னணி
சர்ச்சைகளின் பின்னணி என்ன?
சுமார் 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்நிறுவனத்தை தொடங்கி உச்சத்திற்கு அழைத்து சென்ற 63 வயதான ஜென்சன் ஹுவாங்கிற்கு எதிரான இந்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும், சீனாவை சேர்ந்த அலிஸ் ஹுவாங் என்பவருடன் ஜென்சன் ஹுவாங்கிற்கு தொடர்பு இருப்பதாகவும், என்விடியா சிப்கள் சீன நிறுவனங்களுக்குச் செல்வதற்கு இது உதவியதாகவும் வெளியான தகவல்கள் சர்ச்சையைக் கிளப்பின.
தி நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, என்விடியாவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவரும், தனக்கு கீழ் பணிபுரிந்தவருமான கிம்பர்லி பவலுடன் ஜென்சன் ஹுவாங்கிற்கு தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், தனது மனைவிக்குத் தான் உண்மையாக இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டு ஜென்சன் ஹுவாங் 'முழுப் பொறுப்பையும்' ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
பங்குகள் சரிவு
என்விடியாவின் பங்குகள் சரிவு, சந்தை மதிப்பு குறைவு
இந்தச் சர்ச்சைகளின் காரணமாக என்விடியா நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, வர்த்தக நேரத்திற்கு பிந்தைய வர்த்தகத்தில் என்விடியா பங்குகள் சுமார் 8 சதவீதம் வரை சரிந்தன.
ஒட்டுமொத்தமாக இந்த வாரத்தில் மட்டும் என்விடியா நிறுவனம் சுமார் 600 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது.
அதே நேரத்தில், சந்தையில் என்விடியாவின் ஆதிக்கம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் அதன் போட்டியாளர்களான AMD (4%) மற்றும் Broadcom (3%) நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
விசாரணை
வாரியத்தின் விசாரணை
விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதைத் தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவுத்துறையின் இலக்காக மாறினாரா என்பது குறித்து என்விடியா வாரியம் சுயாதீனக் குழு மூலம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கை "ஒரு கௌரவமான மனிதர்" என்றும் நாட்டிற்காக சிறப்பான சேவையாற்றியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சீனா தொடர்பான விவகாரத்தில் அவர் விளக்கம் அளிக்கத் தவறினால், அமெரிக்க காங்கிரஸ் சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்விடியாவில் சரியான வாரிசுத் திட்டம் இல்லாத சூழலில், ஹுவாங்கின் பதவி நீக்கம் நிறுவனத்தின் எதிர்காலத்தில் பெரும் கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது.