LOADING...
அசுர வேகத்தில் சரியும் ரூபாய் மதிப்பு; வரலாற்றில் முதல்முறையாக ரூ.92-ஐ கடந்தது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.17 ஆக சரிந்தது

அசுர வேகத்தில் சரியும் ரூபாய் மதிப்பு; வரலாற்றில் முதல்முறையாக ரூ.92-ஐ கடந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
12:15 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, இன்று காலை 10:40 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.17 ஆக சரிந்தது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%-க்கும் மேலாக இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரித்து, ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்தியுள்ளது.

காரணங்கள்

ரூபாய் சரிவுக்கான மற்ற முக்கிய காரணங்கள்

உலகளவில் போர் அபாயம் ஏற்படும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலரை நோக்கி செல்கின்றனர். இதனால் டாலரின் தேவை அதிகரித்து, மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு சரிகிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்தன. இது வளரும் நாடுகளின் சந்தைகளிலிருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுத்துள்ளது.

பாதிப்பு

ஏற்படப்போகும் பாதிப்புகள்

ரூபாய் மதிப்பு சரிவதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, அதன் விளைவாக போக்குவரத்து செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். இது நாட்டின் பணவீக்கத்தையும் அதிகரிக்க செய்யும். மத்திய கிழக்கு நிலவரம் மற்றும் கச்சா எண்ணெய் சந்தையின் நகர்வுகளை பொறுத்தே வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement