
பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!:
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,081 கோடி) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.
மேலும் நிலைமையைச் சமாளிக்க நிதி உதவி வழங்க பரிந்துரைத்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானிற்கு எதிரான இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஏப்ரல் 24 அன்று இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது.
பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதன் தாக்கம் குறித்து ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தங்கள் உள்ளீடுகளையும் பரிந்துரைகளையும் அளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
செலவுகள்
இந்திய விமானங்களுக்கு அதிகரிக்கும் செலவுகள்
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை சர்வதேச விமான சேவைகளைக் கொண்டுள்ளன.
வான்வெளி மூடப்பட்டதன் பின்னணியில், அதிக செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக விமானக் கட்டணங்களில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு உட்பட, விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் தொடர்பான அம்சங்கள் அமைச்சகத்தால் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
வான்வெளி கட்டுப்பாடுகள், எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதற்கும் நீண்ட விமான கால அளவிற்கும் காரணமாக இருப்பதால், வட இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் வாராந்திர செலவுகள் ரூ.77 கோடியாக இருக்கும்.
வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயண நேரக் கணக்கீடுகள் மற்றும் தோராயமான செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதல் மாதாந்திர செயல்பாட்டுச் செலவுகள் ரூ.306 கோடிக்கு மேல் இருக்கலாம்.