போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் உடனான ஆலோசனைக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்திப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். எரிசக்தி மற்றும் இராணுவ-தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்க 5 நாள் சுற்றுப்பயணமாக, அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அதிபர் புடின், துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், "எங்கள் நண்பரான பிரதமர் மோடியை ரஷ்யாவில் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்" என அதிபர் புடின் கூறியதாக தெரிவித்தார்.
லாவ்ரோவ் உடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இருநாட்டு தலைவர்களும் நேற்றைய விவாதத்தில், எண்ணெய் மற்றும் நிலக்கரி உட்பட ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதியை இந்திய சந்தைக்கு விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய ஒப்புக்கொண்டனர். பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு, உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு பின்னர், மேற்கு உலக நாடுகளின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறது. உக்ரைனில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக, இந்தியா குரல் கொடுத்து வந்தாலும், ரஷ்யாவின் வெளியுறவு கொள்கையை விமர்சிக்கவில்லை. ஜெய்சங்கர் ரஷ்யாவின் எரிபொருள், நிலக்கரி மற்றும் உரங்களை இருதரப்பு வர்த்தகத்தின் "மிகப் பெரிய கூறுகள்" என விவரித்தார். மேலும் இந்த பொருட்களுக்கான நீண்ட கால வர்த்தகம் குறித்து, இரு தரப்பும் பேசியதாகக் கூறினார்.
கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில், புதிய அணு உலைகள் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இருநாட்டு தலைவர்கள் மத்தியில் கையெழுத்தானது. மொத்தம் 1,000 மெகாவாட் திறனுடைய ஆறு அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், இரண்டு உலைகள் 2014 மற்றும் 2016 செயல்பாட்டிற்கு வந்தது. மேலும் இரு அணு உலைகளுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இது தொடர்பான தகவலை வழங்கவில்லை என்றாலும், விவரம் குறித்த நன்கறிந்தவர்கள் இது, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலை தொடர்பான ஒப்பந்தம் என கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் பிரான்சுடன் அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் இருந்தாலும், ரஷ்யா மட்டுமே தற்போது அணு உலைகளை இந்தியாவில் அமைத்து வருகிறது.
ஆயுதங்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை
எரிபொருட்கள் தவிர, இந்தியாவிற்கு ரஷ்யா மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது. இந்திய பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் 60% ஆயுதங்கள் ரஷ்ய தொடர்பை கொண்டவை. இதை, அண்மைக்காலமாக மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களால் பூர்த்தி செய்ய இந்தியா முயன்று வருகிறது. இருப்பினும் இந்த சந்திப்பில், விண்வெளி திட்டங்கள், ராக்கெட் என்ஜின்கள், செயற்கைக்கோள் அமைப்புகள் மற்றும் இராணுவ வன்பொருள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்கள் விவாதித்தனர். மேலும் இந்த விவாதத்தில், ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல் பாலஸ்தீன போர், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பதட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.