Loading...
அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு உயரிய கௌரவம்! போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி டீனாக டாக்டர் கீதா சுவாமி நியமனம்
போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி டீனாக டாக்டர் கீதா சுவாமி நியமனம்

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு உயரிய கௌரவம்! போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி டீனாக டாக்டர் கீதா சுவாமி நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
06:52 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற போஸ்டன் பல்கலைக்கழகத்தின் சோபானியன் & அவேடிசியன் மருத்துவப் பள்ளியின் புதிய டீனாக இந்திய-அமெரிக்க பெண் மருத்துவர் டாக்டர் கீதா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 20 ஆண்டுகள் டீனாக பணியாற்றிய கரேன் ஆண்ட்மேனுக்குப் பிறகு, பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இவர் தேர்வாகியுள்ளார். வரும் 2027 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இவர் தனது புதிய பொறுப்பை முறைப்படி ஏற்று பணியாற்றவுள்ளார்.

மருத்துவத்துறை

மருத்துவத் துறையிலும் ஆராய்ச்சியிலும் டாக்டர் கீதா சுவாமியின் பங்களிப்பு

டாக்டர் கீதா சுவாமி, மகப்பேறு மருத்துவம் மற்றும் தாய்-சேய் நலத் துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ-விஞ்ஞானி ஆவார்.

டியூக் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அங்கு பேராசிரியர், ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாகத் துணை டீன் போன்ற பல உயரிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

கர்ப்பகாலத் தொற்றுகள், தாய்மார்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் குறைப்பிரசவ பாதிப்புகள் குறித்த இவரது 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

கொரோனா

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியும் உயரிய விருதுகளும்

2009-ல் பரவிய எச்1என்1 பன்றிக் காய்ச்சல் மற்றும் சமீபத்திய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த முக்கிய ஆராய்ச்சி சோதனைகளை இவர் முன்னின்று நடத்தினார்.

2008-ல் அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனத்தின் இளம் ஆராய்ச்சியாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

போஸ்டன் மருத்துவ மையம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டங்களை ஒருங்கிணைத்து, மக்கள் நலனுக்கான சுகாதார ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கல்வி

கல்விப் பின்னணியும் இந்திய வம்சாவளியின் பெருமையும்

சாப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ பட்டங்களைப் பெற்ற கீதா சுவாமி, பின்னர் பிட்ஸ்பர்க் மற்றும் டியூக் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விகளை நிறைவு செய்தார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி பீடத்தின் தலைவராக இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கபட்டிருப்பது, உலகளாவிய அளவில் இந்திய மருத்துவ நிபுணர்களுக்குக் கிடைத்துள்ள மற்றொரு மாபெரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT