இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்
இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து ரஷ்யாவுக்கு வந்த விமானம் தரையிறங்க கூடாது என்று கூறி நூற்றுக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை(அக் 29) மகச்சலாவில் உள்ள ரஷ்யாவின் தாகெஸ்தான் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அந்த விமான நிலையத்தை தற்காலிகமாக மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் விமான சேவைகள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன. இந்த சம்பவத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர், அதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் அதிக முஸ்லீம் மக்களைக் கொண்ட பகுதிகளில் மகச்சலாவும் ஒன்றாகும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் இடையே பெரும் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
துப்பாக்கிகளோடு யூதர்களை தேடி அலைந்த போராட்ட கும்பல்
3 வாரங்களாக தொடர்ந்து நடந்து வரும் இஸ்ரேல் போரில் இதுவரை 1400 இஸ்ரேலியர்களும் 8000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று ரஷ்யாவின் தாகெஸ்தான் விமான நிலையத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், விமான நிலையத்திற்குள் நுழைந்து 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டு போராட்டத்தை நடத்தினர். அதன் பிறகு, விமானம் தரையிறங்கும் இடத்திற்குள் நுழைந்த அவர்கள், யூதர்களைத் தேடும் நோக்கில் ஒவ்வொரு விமானத்தையும் தனித்தனியாக புரட்டி போட்டனர். இதனையடுத்து, போராட்ட கும்பல் உள்ளே நுழையாமல் இருக்க விமானத்தின் கதவுகளைத் திறக்க வேண்டாம் என்று ரஷ்ய விமானி ஒருவர் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.