இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து, நியூயார்க்கில் உள்ள குருத்வாராவுக்கு நேற்று சென்றிருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரது வழியை மறித்து தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்புரப் தினத்தையொட்டி லாங் ஐலேண்டில் உள்ள ஹிக்ஸ்வில்லே குருத்வாராவிற்கு இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து சென்றிருந்தார். அப்போது அவரை வழி மறித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், அவரைச் சூழ்ந்து நின்று கூச்சலிடத் தொடங்கினர். மேலும், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை படுகொலை செய்ததாகவும், பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர்கள் தரன்ஜித் சிங் சந்து மீது குற்றம் சாட்டினர்.
நியூயார்க் குருத்வாராவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது
பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்பி சிங் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "ஆதாரமற்ற கேள்விகளைக் கேட்டு காலிஸ்தானிகள் இந்திய தூதரை துன்புறுத்த முயன்றனர்" என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில், "ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைக்கு நீங்கள்தான் காரணம். பன்னுனைக் கொல்ல சதி செய்தீர்கள்." என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் பஞ்சாபி மொழியில் கூறுவதை நன்றாக கேட்க முடிகிறது. அவர்கள் இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்துவை நகரவிடாமல் சூழ்ந்து நின்று கூச்சலிடுவதையும் அந்த வீடியோவில் நன்றாக பார்க்க முடிகிறது. இந்த சம்பவத்தால் நியூயார்க் குருத்வாராவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.