காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இருப்பினும் இஸ்ரேல் ராணுவ அமைச்சர், குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளில் மட்டுமே இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இது போரின் தீவிரத்தை குறைக்காது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நடக்கும் இடத்திலிருந்து மக்கள் வெளியேற இரண்டு மனிதாபிமான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், காசாவிற்குள் அனுப்பப்படும் நிவாரண உதவிகளை, 150 லாரிகளாக அதிகரிக்க முயற்சி எடுப்பதாக கூறியுள்ளார்.
50 தீவிரவாதிகளை கொன்றதாக இஸ்ரேல் தகவல்
காசா நகரத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளை சுற்றி, நேற்று இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே, ஹமாஸ் அமைப்பின் 'ராணுவ பகுதி' மீது நடத்திய தாக்குதலில், 50 "தீவிரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே, ராணுவ டேங்குகளை பார்த்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தல் அல்-ஹவா பகுதியின் தென்மேற்கில் 2.3 கிமீ (1.4 மைல்) தொலைவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனையைச் சுற்றி, கடுமையான மோதல் நேற்று நடைபெற்றது. காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை வளாகமான அல்-ஷிஃபா மருத்துவமனையில், 2,000 நோயாளிகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்கத்திற்கு பின், இஸ்ரேல்-பாலஸ்தீனியம் இடையே போர் மூண்டது. ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 240க்கும் மேற்பட்டோர் பணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு தற்போது வரை 10,500 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 லட்சம் பாலஸ்தீன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
உதவிகளை அதிகரிக்க கோரும் ஐநா
ஐநா அமைப்பு, காசாவிற்கு வரும் உதவிகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளதாக கூறியுள்ளது. "காசாவிற்குள் வரும் உதவிகள், மக்களின் தேவைகளின் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இது சகிக்க முடியாத மனிதாபிமான சூழ்நிலையை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளது. போர் தொடங்கியவுடன் காசாவிற்குள் செல்லும் அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் துண்டித்தது. பின்னர், பல்வேறு நாடுகளின் கோரிக்கையை அடுத்து, எகிப்தின் ரஃபா எல்லை வழியாக மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் தற்போது வரை, 756 லாரிகள் உதவிப் பொருட்களுடன் காசாவிற்குள் நுழைந்துள்ளது.. போர் தொடங்கும் முன் தினமும் சராசரியாக இஸ்ரேல் மற்றும் எகிப்தில் இருந்து, 500 லாரிகள் காசாவிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.