LOADING...
ஈரான் இறங்கி வருகிறதா? அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்?
கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றது ஈரான் என ட்ரம்ப் தகவல்

ஈரான் இறங்கி வருகிறதா? அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 30, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மூலமாக மறைமுகமாக நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர் ட்ரம்ப் தனது பேட்டியில், "ஈரான் எங்களது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. தங்களது நேர்மையை நிரூபிக்க 10 பெரிய கப்பல்கள் நிறைய கச்சா எண்ணெயைப் பரிசாக வழங்கியுள்ளனர். மேலும் 20 கப்பல்கள் இன்று முதல் புறப்படத் தயாராக உள்ளன," எனத் தெரிவித்துள்ளார்.

நிபந்தனை

அந்த 15 அம்சத் திட்டத்தில் இருப்பது என்ன?

சர்வதேச ஊடகங்களின்படி அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 1. அணுசக்தித் திட்டம் முடக்கம்: ஈரான் தனது யூரேனியம் செறிவூட்டும் பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும். நடான்ஸ், ஃபோர்டோ போன்ற முக்கிய அணுசக்தி நிலையங்களை மூடிவிட்டு, சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும். 2. ஆயுத உதவி நிறுத்தம்: ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கி வரும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். 3. ஹார்முஸ் ஜலசந்தி: உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியைத் தடையின்றி திறந்து வைக்க வேண்டும்.

சலுகை

ஈரானுக்கு கிடைக்கும் சலுகைகள்

இந்த நிபந்தனைகளை ஈரான் ஏற்றால், அமெரிக்கா அதற்கு பதிலாகப் பின்வரும் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது: ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நீக்குதல். சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் ஈரானின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு ஆதரவு அளித்தல். உடனடியாகப் போர் நிறுத்தத்தை அமல்படுத்துதல். இருப்பினும், இந்தத் திட்டம் 2025-ல் தோல்வியடைந்த திட்டத்தின் மறுவடிவம் என்பதால், இது நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏப்ரல் 6-ஆம் தேதியைப் பேச்சுவார்த்தைக்கான இறுதி நாளாக ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement