கமலா ஹாரிஸுக்கு வாக்களித்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களித்துள்ளார். நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களுக்காக முன்கூட்டிய வாக்களிப்பு முறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. அதன்படி பைடன் நேற்று (அக்டோபர் 28) அன்று வாக்களித்தார். முன்னதாக அதிபர் பைடனின் உடல்நலம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தோற்கடிக்கும் வாய்ப்புகள் குறித்த ஜனநாயகக் கட்சியினரின் கவலைகள் காரணமாக கடந்த ஜூலை மாதம் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை முடிக்க முடிவு செய்த பைடனுக்கு இது ஒரு கசப்பான தருணமாகத்தான இருந்திருக்கக்கூடும். பைடன் திங்களன்று டெலாவேர் மாநிலத் தேர்தல் துறையில் வாக்களித்தார்.
Twitter Post
அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெறும் என ஜோ பைடன் நம்பிக்கை
சுமார் 40 நிமிடம் வரிசையில் காத்திருந்து ஜனாதிபதி பைடன் வாக்களித்துள்ளார். அதிபர் ஜோ பைடன், கமலாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த பின், அந்த அனுபவம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது இனிமையானது' என பதில் அளித்தார். கமலா ஹாரிஸ் உட்பட - ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று பைடனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "செய்வோம் என்று நினைக்கிறேன்," என்று கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் கடைசிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.