அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையா? ஐ.நா சபை கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில்(UNGA) இரு நாடுகளின் உயர் அதிகாரிகளிடையே 3 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய ஆலோசகர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகிய இருவரும் ஈரானிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப்,"இன்று அமெரிக்க அதிகாரிகளும் ஈரானியப் பிரதிநிதிகளும் 3 மணி நேரம் ஆலோசித்தனர். அது மிகவும் நல்லதொரு பேச்சுவார்த்தையாக அமைந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பை தனியாக சந்தித்துப் பேசினார்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானின் நிபந்தனைகள்
வணிக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கு ஈரான் மூன்று முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அனைத்துப் போர்க்களங்களிலும் தாக்குதல்களை நிறுத்தி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உரை
ஐ.நா சபையில் டிரம்பின் உரையும் ஈரானின் வெளிநடப்பும்
ஐ.நா பொது சபையில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், "ஈரானை முற்றிலும் நிர்மூலமாக்கி நரகத்திற்கு தள்ளுவதா அல்லது அவர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதா என்ற சூழல் உள்ளது" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
அமெரிக்க தாக்குதல்கள் குறித்து டிரம்ப் பேசத் தொடங்கியதும், ஐ.நா அவையில் இருந்த ஈரானிய பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடன் ஒரு சுமுகமான அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனான இருதரப்புச் சந்திப்பின்போதும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.