ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து இரண்டு ரஷ்ய தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து இரண்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்கு பழிக்கு பழியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. "ரஷ்ய அரசு எங்கள் தூதர்களை துன்புறுத்துவதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது. மாஸ்கோவில் எங்கள் தூதர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளுக்கு விளைவுகள் இருக்கும்" என செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் அறிக்கையில் கூறியிருந்தார். கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ரஷ்ய அரசு அமெரிக்காவின் இரண்டு தூதர்கள் 'சட்டவிரோத நடவடிக்கைகளில்' ஈடுபடுவதாக குற்றம் சாட்டி ஏழு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்காக வேவு பார்த்ததாக குற்றச்சாட்டு
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியரான ரஷ்யாவைச் சேர்ந்த ராபர்ட் ஷோனோவ் மூலம் அமெரிக்க தூதர்கள் ரஷ்யாவின் உக்ரையனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை திரட்டியதாக குற்றம் சாட்டியது. இதன்பின் கடந்த ஆகஸ்ட் மாதம் ராபர்ட் ஷோனோவ்வை ரஷ்யாவின் எஃப்எஸ்பி அமைப்பு கைது செய்தது. இந்த விவகாரத்தை காரணம் காட்டியே ரஷ்யா, அமெரிக்க தூதர்களான ஜெஃப்ரி சில்லின் மற்றும் டேவிட் பெர்ன்ஸ்டீன் ஆகியோரை வெளியேற்றியது. தூதர்களை இரு நாடுகள் வெளியேற்றியதன் மூலம் இரு நாட்டு உறவுகள் பனிப்போருக்கு பின் மிகவும் மோசமான நிலைமைக்கு சரித்துள்ளன.