கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம்
உக்ரைன் தலைநகரமான கியேவ் நகரத்தின் மீது இன்று காலை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்தது. இது தொடர்பாக கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகையில், "இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகங்கள் தலைநகர் வழியாக ஓடும் டினிப்ரோ ஆற்றின் கிழக்குப் பகுதியில் விழுந்ததில், குறைந்தது 53 பேர் காயமடைந்ததாகவும், மழலையர் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும்" தெரிவித்தார். காயமடைந்தவர்களில் 26 நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்நாட்டின் தலைநகரம் மீது, பல மாதங்களுக்கு பின் நடைபெறும் கொடூரமான தாக்குதலாகும்.
உக்ரைனுக்கு உதவிகள் வழங்க மறுக்கும் அமெரிக்க குடியரசு கட்சியினர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை, 21வது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் ஆயுதங்கள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போர் செய்ய நிதி உதவி கோரி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்கா சென்றிருந்தபோது இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா உக்ரைனுக்கு முன்னர் அறிவித்த ராணுவ உதவிகள் மற்றும் ஆயுதங்கள் தீர்ந்து வரும் நிலையில், புதிய உதவிகளை அறிவிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து வருகின்றனர். அவர்களை உக்ரைனுக்கான 61.4 பில்லியன் டாலர்களுக்கான நிதி உதவியை விடுவிக்க வலியுறுத்தவே, ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.