
உக்ரைன் உளவுத்துறை தலைவரின் மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல திட்டம்?
செய்தி முன்னோட்டம்
உக்ரைனின் உளவுத்துறை தலைவரின் மனைவி ஹெவி மெட்டல் விஷத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.
மரியானா புடனோவா, உக்ரைனின் இராணுவ உளவுத்துறை அமைப்பின் தலைவரான கிரிலோ புடானோவின் மனைவி ஆவார்.
இவர் விஷத்தால் பாதிக்கப்பட்டதை அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர், ஆண்ட்ரி யூசோவ் அசோசியேட்டட் பிரஸ் இடம் உறுதி செய்தார்.
இருப்பினும், அவர் இது குறித்து கூடுதல் தகவல்களை வழங்கவோ, இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தோ தெரிவிக்கவில்லை.
2nd card
விசாரணையை தொடங்கிய உக்ரைன் அரசு
பெயர் குறிப்பிடப்படாத உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உக்ரைனின் பேபல் செய்தித் தளம், இச்சம்பவத்தை "கொலை முயற்சி" எனக் குறிப்பிட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பேபல், மரியானா புடனோவா உடலில் கண்டறியப்பட்டுள்ள பொருட்கள், "தினசரி வாழ்க்கையிலோ, ராணுவ பயன்பாட்டிற்கோ பயன்படுத்தப்படுவதில்லை" என கூறியுள்ளது.
இதனால், விஷம் வைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது.
புடானோவ் ரஷ்ய அரசு பாதுகாப்பு சேவையான எப்எஸ்பி ஆல் நடத்தப்பட்ட, 10 படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் யூசோவ் கூறியிருந்தார்.
உள்நாட்டு ஊடகங்களிடம் பேசிய புடானோவ், மனைவி மரியானா அவருடன் தங்கியிருப்பதாக தெரிவித்து இருந்தார். புடானோவ்விற்கு வைக்கப்பட்ட விஷத்திற்கு, அவர் மனைவி இறையாகி இருக்கலாம் என கருதப்படுகிறது.