ஈரானிய ஜெனரல் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை குண்டுவெடிப்பு: 95 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
ஈரானின் தென்கிழக்கு நகரமான கெர்மனில் நேற்று (3 ஜனவரி 2024 ) நடைபெற்ற ஜெனரல் சுலைமானியின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் விழாவில் இரட்டை வெடிகுண்டு வெடித்ததில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்ட ஈரானிய படைத்தளபதி காசிம் சுலைமானியின் நினைவு தினமான நேற்று, அவருக்கு அஞ்சலி செலுத்த, அவரின் நினைவிடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தபோது இரட்டை குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, இரண்டு குண்டு வெடிப்புகளும் 20 நிமிட இடைவேளையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாக மாநில ஒளிபரப்பு நிறுவனமான இரிப் தெரிவித்துள்ளது.
card 2
IS போராளிகளால் நடத்தப்பட்டதா?
குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இந்த இரட்டை குண்டு வெடிப்புக்கு குறிப்பிடப்படாத "பயங்கரவாதிகள்" தான் காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர், இந்த குண்டுவெடிப்புகளை பார்க்கும் போது, முற்காலத்தில் IS போராளிகளால் நடத்தப்பட்ட "பயங்கரவாத தாக்குதலை" ஒத்து இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வன்மையாக கண்டித்துள்ளார். "இது "கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற குற்றம்" என்று அவர் கூறினார்."இந்த கோழைத்தனமான செயலை செய்த குற்றவாளிகள் மற்றும் தலைவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் படைகளால் தண்டிக்கப்படுவார்கள்" என்றும் ஈரான் அதிபர் கூறினார்.
card 3
இஸ்ரேல் மீது குற்றம் சாடுகிறதா ஈரான்?
கடந்த காலங்களில், ஈரான் எல்லைகளுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான், இஸ்ரேலைக் குற்றம் சாட்டி வந்தது.
ஆனால் அக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்புகளில் வெளிநாட்டு அரசின் தொடர்பு எதுவும் இல்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கன்றன.
இந்த குண்டு வெடிப்புகளை ரஷ்யா, துருக்கி உட்பட பல உலக நாடுகள் கண்டித்துள்ளன.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா. சபை தலைவரும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் கூறியுள்ளனர்.