பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் மீண்டும் காஷ்மீர் விவகாரம்! ஐ.நா-வில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசியது என்ன?
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரசீப் தய்யிப் எர்டோகன், காஷ்மீர் பிரச்னையை ஐ.நா சாசனத்தின் கீழ் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் முன்னிலையில் ஐ.நா தலைமையகத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டோகன்,"தெற்காசியாவில், காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்து தகராறுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் தொடர்புடைய தீர்மானங்களின் கட்டமைப்பிற்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவது முக்கியம்" எனக்குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரம் தவிர்த்து, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்த எர்டோகன், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காஷ்மீர்
தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனையை எழுப்பும் துருக்கி
துருக்கி அதிபர் எர்டோகன் ஐ.நா பொதுச் சபையில் காஷ்மீர் பிரச்னையைப் பேசுவது இது முதல் முறையல்ல.
2019-இல் ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றபோது, எர்டோகன் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது துருக்கி பயணத்தை ரத்து செய்ததுடன், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பும் குறைக்கப்பட்டது.
2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும் காஷ்மீரிகளின் விருப்பப்படி இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என எர்டோகன் கருத்து தெரிவித்திருந்தார்.
நிலைப்பாடு
இந்தியாவின் பதில் மற்றும் உறுதியான நிலைப்பாடு
துருக்கியின் இத்தகைய கருத்துகளுக்கு இந்தியா தொடர்ந்து கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைக்க முடியாத முழுப் பகுதி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
மூன்றாம் நபரின் தலையீடு அல்லது சர்வதேச அமைப்புகளின் தலையீடு இன்றி, சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியா-பாகிஸ்தான் இடையே மட்டுமே இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய உள்நாட்டு விவகாரம் இதுவென இந்தியா தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது.