ஸ்பெயினில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மாபெரும் பொது வேலைநிறுத்தம்; லட்சக்கணக்கில் திரண்ட தொழிலாளர்கள்
செய்தி முன்னோட்டம்
ஸ்பெயினில் கடும் வாடகை உயர்வு, வீடுகளின் தட்டுப்பாடு மற்றும் வெளியேற்றங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் சுமார் 4 மில்லியன் தொழிலாளர்கள் புதன்கிழமையன்று பங்கேற்றனர். இன்னும் மூன்று வாரங்களில் முன்கூட்டிய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2012-ஆம் ஆண்டின் ஐரோப்பிய கடன் நெருக்கடிக்கு பிறகு ஸ்பெயின் காணும் முதல் மாபெரும் பொது வேலைநிறுத்தம் இதுவாகும். ஸ்பெயினின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களான UGT மற்றும் CCOO ஆகியவை இந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கியதுடன், வாடகைதாரர்கள் சங்கங்களும் இதில் பெருமளவில் கைகோர்த்துள்ளன.
முக்கிய அம்சங்கள்
வேலைநிறுத்தத்தின் தாக்கம்
நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்த வேலைநிறுத்தத்திற்கு மாபெரும் ஆதரவு கிடைத்தது.
தலைநகர் மாட்ரிட்டின் கிரான் வியா உள்ளிட்ட முக்கிய வணிக வீதிகளில் கடைகள் மூடப்பட்டன.
தேசிய மின் கட்டமைப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, காலை 10:00 மணிக்கும் 11:00 மணிக்கும் இடையே ஸ்பெயினின் மின்சாரத் தேவை சுமார் 15.5% வரை குறைந்துள்ளது.
நவாட்டேயில் உள்ள ஃபோல்டவாக் மற்றும் பார்சிலோனாவில் உள்ள SEAT ஆலைகள் உட்பட துறைமுகங்கள் மற்றும் வாகனத் தயாரிப்புத் தொழில்துறையில் 90% வரை உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பார்சிலோனா மற்றும் மாட்ரிட் நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
வாடகை நெருக்கடி
வாடகை நெருக்கடியும் இளைய தலைமுறையின் ஆத்திரமும்
ஸ்பெயின் தற்போது சுமார் 750,000 வீடுகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2028-க்குள் 1 மில்லியனை தாண்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
ஸ்பெயினில் சராசரி மாத வாடகை €1,176 ஆக உள்ளது. இது அந்நாட்டு இளைஞர்களின் மாதச் சம்பளத்தில் 98.7%-ஐப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
"எனக்கு 36 வயதாகிறது; என்னால் இன்னமும் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வாழ முடியவில்லை. வாடகையும் வீட்டு விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டே செல்கிறது" என மாட்ரிட்டை சேர்ந்த மருத்துவமனை ஐ.டி ஊழியர் ஜீசஸ் கோன்சலஸ் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
மோதல்
அரசியல் அழுத்தமும் மோதல்களும்
பிரதமர் பெட்ரோ சான்செஸ் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் இதை முக்கியப் பிரச்சாரப் பொருளாக மாற்ற முயன்று வருகிறார்.
இதன் மூலம் தனது நெருங்கிய வட்டாரத்தில் நிலவும் ஊழல் விசாரணைகள் மற்றும் கடந்த மாத ரயில் விபத்து விவகாரங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப அவர் திட்டமிட்டுள்ளார்.
போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
மதிய நிலவரப்படி 476 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் 40 பேரைக் கைது செய்தனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் லத்திகளைக் கொண்டு போலீசார் தாக்கியதில் குறைந்தது 20 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
அரசின் 'அளவுக்கு அதிகமான' இந்த அடக்குமுறைக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.