Loading...
சவூதி அரேபியா - ஹூதி கிளர்ச்சியாளர்கள் இடையே தீவிர மோதல்: விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்
சவூதி விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்

சவூதி அரேபியா - ஹூதி கிளர்ச்சியாளர்கள் இடையே தீவிர மோதல்: விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 12, 2026
07:36 am

செய்தி முன்னோட்டம்

ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே வான்வெளித் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. சவூதியின் தலைநகர் ரியாத் மற்றும் தம்மாம் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மீது ஹூதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் போர்ப்பபதற்றம் ஏற்பட்டுள்ளது. ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் 4-வது முனையம் மீது ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்துத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்

விமான நிலையங்கள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்கள்

இதற்கு முந்தைய நாள் நடைபெற்ற இதே போன்றதொரு ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சவூதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்மாம் கிங் ஃபஹ்ட் சர்வதேச விமான நிலையமும் ஹூதிகளால் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டது.

ஹூதி அமைப்பின் ராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, ரியாத் மற்றும் தம்மாம் விமான நிலையங்கள் மீதும், சவூதி அரக்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் வசதிகள் மீதும் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

சவூதி விமான நிலையங்களைப் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என ஹூதிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

எதிர்த்தாக்குதல்

சவூதியின் எதிர்த்தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு

மறுபுறம், ஏமனில் ஹூதிகளுக்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் சானா மற்றும் சதா ஆகிய ஹூதி தளங்கள் மீது 124 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய பதற்றமான சூழலில், ஹூதிகளுக்கு எதிரான சவூதியின் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வெடித்த பிராந்தியப் போரின் ஒரு பகுதியாகவே தற்போதைய சவூதி - ஹூதி மோதலும் உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT