கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா; அடுத்து அணு ஆயுதமா?
ரஷ்யா, உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 1,000 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் போரில் இதுபோன்ற சக்திவாய்ந்த அணுசக்தி திறன் கொண்ட ஆயுதம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று வியாழனன்று உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாடுகள் தந்து உதவிய ஏவுகணைகளை அதன் எல்லைகளுக்குள் ஏவியதால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ICBM கள் அணு ஆயுதங்களை ஏந்தி செல்ல வடிவமைக்கப்பட்ட மூலோபாய ஆயுதங்கள் மற்றும் ரஷ்யாவின் அணுசக்தி ஆயுதங்களின் முக்கிய பகுதியாகும்.
இது சாம்பிள் தான் என்பது போல கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை செலுத்திய ரஷ்யா
ரஷ்யா தனது அணுசக்தி திறன்களை பயன்படுத்தக்கூடும் என உலக நாடுகள் அஞ்சி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தாக்குதல் போரில் அதிகரித்து வரும் பதட்டங்களை மேலும் அதிகரிக்கும். வாஷிங்டன் வழங்கிய மிக நீண்ட தூர ஏவுகணைகளான ATACMS ஐ உக்ரைன் பயன்படுத்துவது, மேற்குலகம் மோதலை அதிகரிக்க விரும்புகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும் என்று மாஸ்கோ கூறியது. உக்ரைன் எல்லைக்குள் 5,800 கிலோமீட்டர் தொலைவில் 5,800 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய RS-26 Rubezh ஏவுகணையை ரஷ்யா செலுத்தியதாக, Kyiv-ஐ தளமாகக் கொண்ட ஒரு ஊடகமான Ukrainska Pravdaஇல் ஆதார அடிப்படையிலான அறிக்கையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. ஆனால், அந்த ஏவுகணை எந்த அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லவில்லை.
ரஷ்யா ஏவுகணையின் விவரங்கள்
RS-26 முதன்முதலில் 2012 இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 12 மீட்டர் நீளம், 36 டன் எடை கொண்டது என மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) தெரிவித்துள்ளது. RS-26 ஏவுகணைக்கு கூடுதலாக, ரஷ்யப் படைகள் ஒரு Kinzhal ஹைப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் ஏழு Kh-101 க்ரூஸ் ஏவுகணைகளையும் இன்று ஏவியது. அவற்றில் ஆறு சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேனிய விமானப்படையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைனின் டினிப்ரோவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை கூறியது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்ததாகவும் கூறியது. எனினும் இந்த தாக்குதல் உக்ரேனிய விமானப்படை அறிக்கை குறித்து ரஷ்யா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.