லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்
லெபனான் நாட்டில் பணியாற்றி வந்த ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் பத்திரிக்கையாளர், இஸ்ரேலின் திசையில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார் என அந்த முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 'அல் ஜசீரா' நிறுவனத்தின் வீடியோகிராபர் உட்பட 6 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர். காட்சி ஊடகவியலாளரான இஸாம் அப்துல்லாஹ்வும் மற்ற நபர்களும், தெற்கு லெபனானின் இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய அல்மா அல்-ஷாப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டனர். இந்த பகுதியில் இஸ்ரேலுக்கும், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆயுத குழுவான ஹிஸ்புல்லாகும் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்காத இஸ்ரேல்
லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இருந்த போதும் இஸ்ரேல் ராணுவ படையினர் இந்த தாக்குதல் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் இது குறித்து பேசிய இஸ்ரேலுக்கான ஐநா தூதர் கிளாத் எர்டன், "நாங்கள் வேலையைச் செய்யும் ஒரு பத்திரிக்கையாளரை தாக்கவோ, கொள்ளவோ அல்லது சுடவோ விரும்ப மாட்டோம். இருந்த போதும் நீங்கள், நாம் போரில் உள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது" என பேசினார். மேலும் அவர் இஸ்ரேல் அரசு இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் என தெரிவித்தார். ராய்ட்டர்ஸ் செய்தி முகமை, இஸாம் அப்துல்லா கொல்லப்பட்டதற்கு தங்களது அனுதாபத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.