ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலின் விளைவாக, அமெரிக்க அதிபரின் அரபு நாடுகள் உடனான சந்திப்பை, ஜோர்டான் ரத்து செய்துள்ளது. ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாத், அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்கள் உடனான சந்திப்பு இன்று ஆமன் பகுதியில் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்த சந்திப்பில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி மற்றும் பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு இஸ்ரேலை காரணம் காட்டும் ஹமாஸ்
அல் அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பின், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய ஹமாஸ் அமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக கருதப்படும் இஸ்மாயில் ஹனியே, அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு மறைமுக ஆதரவு தருவதாக குற்றம் சாட்டினார். "இந்த மருத்துவமனை மீதான தாக்குதல், எதிரியின் கொடூரத்தையும், அவனது தோல்வியின் உணர்வையும் காட்டுகிறது." எனக் கூறியவர், பாலஸ்தீன மக்களை, எதிரிகளுக்கு எதிராகவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் போராட வற்புறுத்தினார். மேலும் அனைத்து அரேபியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுகோள் விடுத்தார். சவுதி அரேபியா, பெஹ்ரைன், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை மறுக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை ஆண்டு வரும் ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பு, அல் அஹ்லி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடன் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள இஸ்ரேல், காஸாவில் செயல்பட்டு வரும் மற்றொரு ஆயுதக் குழுவான 'இஸ்லாமிய ஜிகாத்' மீது இந்த தாக்குதலுக்கு குற்றம் சாட்டியுள்ளது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணை, தவறுதலாக மருத்துவமனையை தாக்கி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இந்த உலகிற்கு தெரியும்: இது காஸாவில் உள்ள காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் தான் மருத்துவமனையை தாக்கினார்கள்." "எங்கள் குழந்தைகளை யார் கொடூரமாக கொன்றார்களோ, அவர்களே அவர்கள் குழந்தைகளையும் கொடூரமாக கொன்றுள்ளனர்." என தெரிவித்தார்.
பைடனின் இஸ்ரேல் பயணத்தை சிக்கலாக்கியுள்ள மருத்துவமனை மீதான தாக்குதல்
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் குறித்து விவாதிக்கவும் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தில் அவர் இஸ்ரேல் பிரதமரை தனியாக சந்தித்து பேச இருக்கிறார். ஹமாஸ் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது முதல், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்புச்செயலாளர் உள்ளிட்டோர் ஏற்கனவே இஸ்ரேல் நாட்டிற்கு வந்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இஸ்ரேல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அமெரிக்காவிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இஸ்ரேல் மருத்துவமனை மீது தாக்குதலில் நடத்தி இருப்பது உலகரங்கில் அமெரிக்காவிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.