முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவும் வகையில், தொகுதிகளை மறு வரையறை செய்ததாக அந்நாட்டு தலைமை தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன் எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுகள், தேர்தல் நியாயமாக நடைபெறுவதை கேள்விக்குறியாக்கி உள்ளது. தொகுதி எல்லைகளை திருத்தும் செயல்முறை, சமீபத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது. இதற்கு எதிர்வினையாக, 1,300 புகார்கள் வந்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புகார்களில் 80% க்கும் அதிகமானவை, எல்லை நிர்ணயக் குழு குறிப்பிட்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் கட்சிகளுக்குச் சாதகமாக செயல்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்புகார்கள் குறித்த இறுதி முடிவு நாளை எடுக்கப்பட உள்ளது.
400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளை, ஒரே தொகுதியாக இணைத்த தேர்தல் ஆணையம்
சாலை இணைப்புகள் இல்லாத, வெவ்வேறு கலாச்சாரங்களை கொண்ட, 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு பலுசிஸ்தான் மாவட்டங்களான ஹர்னாய் மற்றும் சிபியை, ஒரே தொகுதியாக இணைக்க பரிந்துரைக்கப்பட்டது அந்த புகார்களில் முக்கியமானதாக உள்ளது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாக வேண்டி, நவம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய தேர்தல், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த நவாஸ் ஷெரீப் நாடு திரும்பவே, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரமிக்க பாகிஸ்தான் ராணுவத்தால்,நவாஸ் ஷெரீப் விரும்பப்படும் வேட்பாளர் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி மறுத்துள்ளது.
இம்ரான் கான் கட்சிக்கு எதிராக மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகள்
முன்மொழியப்பட்ட மறுவரையறையில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் அதிகமான தொகுதிகள், வாக்காளர் எண்ணிக்கை தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்று, ப்ரீ அண்ட் ஷேர் எலக்சன் நெட்வொர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஷெரீப் கட்சியில் புதிதாக இணைந்த, முன்னாள் பிரதமர் நூர் முஹம்மது துமர் என்பவருக்கு சாதகத்தை ஏற்படுத்தவே, பலுசிஸ்தான் மாவட்டங்கள் இணைக்கப்படுவதாக பலுசிஸ்தான் அரசியல் தலைவர் தீனார் டோம்க் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), கட்சிக்கு எதிராக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தை ஒரு தசாப்தத்திற்கு மேலாக பிடிஐ ஆட்சி செய்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் அக்கட்சியின் செல்வாக்கை குறைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.