தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவி, முஷால் உசேன் மாலிக், பாகிஸ்தானில் காபந்து அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, முஷால் உசேன் மாலிக், மனித உரிமைகள் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறைக்கான அமைச்சராக செயல்பட உள்ளார். முஷாலின் கணவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எஃப்) பயங்கரவாத இயக்கத்தின் தலைவருமான யாசின் மாலிக், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் தண்டனை பெற்று, டெல்லி திகார் சிறையில் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இருவரும் 2009-இல் இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் இவர்களின் திருமண விழாவில் பாகிஸ்தானின் சில முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் காபந்து அரசு பொறுப்பேற்பு
பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப், நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ராஜினாமா செய்ததை அடுத்து, தேசிய சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால பிரதமர், அன்வாருல் ஹக் காக்கர் தலைமையிலான காபந்து அரசு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பதவியேற்றது. இந்த இடைக்கால அரசில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர், ஜலீல் அப்பாஸ் ஜிலானி, வெளியுறவு அமைச்சராகவும், சர்பராஸ் புக்டி, உள்துறை அமைச்சராகவும், ஷம்ஷாத் அக்தர், நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல், அன்வர் அலி ஹைதர், பாதுகாப்பு அமைச்சராக செயல்பட உள்ள நிலையில், மொத்தம் 16 அமைச்சர்கள் மற்றும் 3 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இவர்கள் பதவியில் இருப்பர்.